டோல்கேட் கட்டணம் வசூலிக்க தடைகோரிய வழக்கு தள்ளுபடி உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: நான்குவழிச் சாலை 'டோல்கேட்'களில் கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. தென்காசி முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கட்ரமணா 2015 ல் தாக்கல் செய்த மனு: மத்திய அரசின் சாலை போக்குவரத்துத்துறை சார்பில், நான்குவழிச்சாலைகளில் ஒவ்வொரு 60 கி.மீ., இடைவெளிக்கும் 'டோல்கேட்' அமைத்து, வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கின்றனர். தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பதன் நோக்கம் வாகனங்கள் விரைவாக, பாதுகாப்பாக செல்லவே. 'டோல்கேட்'களில் கட்டண வசூலின்போது, வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. எரிபொருள் வீணாகிறது. இதனால் சாலை அமைத்ததன் நோக்கம் நிறைவேறவில்லை. 'டோல்கேட்'களில் ஆண்டுக்கு ரூ.16 ஆயிரத்து 500 கோடி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பெட்ரோல், டீசலுக்கு மத்திய அரசு சாலை வரி வசூலிக்கிறது. இதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. இந்தியாவில் 1980க்கு முன், வாகன உற்பத்தி ஆண்டுக்கு 2 லட்சமாக இருந்தது. தற்போது பல கோடியாக உயர்ந்துள்ளது. வாகன விற்பனை மூலம் ஆண்டுக்கு ரூ.பல கோடி வருவாய் கிடைக்கிறது. இதனால் 'டோல்கேட்' கட்டணம் வசூலிக்க வேண்டிய அவசியமில்லை. 'டோல்கேட்'களுக்கு எதிராக மக்கள் அதிருப்தியில் உள்ளனர். மகாராஷ்டிராவில் 22 'டோல்கேட்'களை மக்கள் சேதப்படுத்தினர். டில்லி அருகே நொய்டாவில் போராட்டம் நடந்தது. துாத்துக்குடியில் போராட்டத்தால் ஒரு 'டோல்கேட்'டை மூடினர். திருமங்கலம் அருகே கப்பலுார் 'டோல்கேட்'டில் ஊழியர்கள், வாகனங்களில் செல்வோர் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்.எச்.ஏ.ஐ.,) அல்லது ஏஜன்ட் மூலம் 'டோல்கேட்' கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலை கட்டண விதி 2008 (டோல் கட்டணம் நிர்ணயம் மற்றும் வசூல்) செல்லாது என உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு பிறப்பித்த உத்தரவு : டோல்கேட் கட்டணம் வசூலிக்க மத்திய அரசுக்கு உரிமை உள்ளது என ஏற்கனவே உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளன. இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டது.