உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த சலுகைகளை வழங்க ஐகோர்ட் உத்தரவு

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த சலுகைகளை வழங்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை:தமிழக அரசிடமிருந்து, 99 ஆண்டு குத்தகைக்கு, மாஞ்சோலை எஸ்டேட் பகுதியை வாங்கி, பி.பி.டி.சி., என்ற, 'பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன்' நிறுவனம் நிர்வகிக்கிறது.

இரண்டு மடங்கு இழப்பீடு

கடந்த, 2018ல், 8,374 ஏக்கர் எஸ்டேட் நிலத்தை பாதுகாக்கப்பட்ட வனமாக அரசு அறிவித்தது. தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை பி.பி.டி.சி., நிறுவனம் அறிவித்தது.இதை எதிர்த்து, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், தொழிலாளர்கள் தரப்பில், 'மறுவாழ்விற்கான உதவிகள் வழங்க மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை, 'டான்டீ' தேயிலை தோட்ட கழகம் நிர்வாகம் ஏற்று நடத்த, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று, வழக்கு தொடரப்பட்டது.இதேபோல், 'விருப்ப ஓய்வு திட்டத்தில் தொழிலாளர்கள் சமர்ப்பித்த விண்ணப்பங்களை ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு நிலம் உள்ளிட்ட பணப்பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும்' என, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்குகள் விசாரணை, வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வுக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, 'தேயிலை தோட்டத்தை, 'டான்டீ' கையகப்படுத்துவது சாத்தியமில்லை. ஏற்கனவே நஷ்டத்தில் உள்ளது. மனிதாபிமான அடிப்படையில், தோட்ட தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து, வணிகக்கடன் வழங்குவதுடன், வீட்டு மனை, கலைஞர் கனவு இல்ல திட்ட வீடுகள் போன்ற சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன' என்று, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் சார்பில், 'மாஞ்சோலை தேயிலை தோட்டப்பகுதி காப்புக்காடு மற்றும் புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அங்கு நிறுவன செயல்பாடுகளை தொடர இயலாது. 'இது, அங்கு பணிபுரிந்த ஊழியர்களுக்கு நன்றாக தெரியும். எனவே, விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு, நிறுவனம் இரண்டு மடங்கு இழப்பீடு வழங்கியுள்ளது' என்று, தெரிவிக்கப்பட்டது.

ஓய்வு திட்டம் ஒரு மோசடி

மனுதாரர்கள் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர், 'விருப்ப ஓய்வு விண்ணப்பங்களில், ஊழியர்களை வற்புறுத்தி கையெழுத்திட வைத்துள்ளனர். விருப்ப ஓய்வு திட்டம் ஒரு மோசடி' என, தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில், நேற்று சிறப்பு அமர்வு பிறப்பித்த உத்தரவு:தொழிலாளர்களின் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பாக, மாநில அரசு திட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி அனைத்து முயற்சிகளையும், அரசு மேற்கொள்ள வேண்டும். முழு நிலப்பரப்பையும், வனப்பரப்புடன் காப்புக்காடாக பராமரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பூர்வீக மரங்களை நடவும், வளர்க்கவும், பாதுகாக்கவும், மாநில அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.காப்புக்காடு மற்றும் வனச்சட்டங்களின்படி, மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அரசு அறிவித்த அனைத்து சலுகைகளையும், தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்ட அமர்வு, விருப்ப ஓய்வு திட்டத்தை எதிர்த்த மனுக்களை தள்ளுபடி செய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !