உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேசவிரோத செயலில் ஈடுபட்டதாக நீக்கப்பட்ட மாணவர் தேர்வெழுத அனுமதி: ஐகோர்ட் உத்தரவு

தேசவிரோத செயலில் ஈடுபட்டதாக நீக்கப்பட்ட மாணவர் தேர்வெழுத அனுமதி: ஐகோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : 'தேசவிரோத செயலில் ஈடுபட்டதாகக் கூறி, தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட மாணவரை தேர்வெழுத அனுமதிக்க வேண்டும்' என, ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஸ்லம். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில், முதுகலை சமூகப்பணி படிப்பில், இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.விடுதியில் தங்கியிருந்த அஸ்லம் உட்பட மூன்று மாணவர்கள், தேசவிரோத செயலில் ஈடுபட்டதாகக் கூறி, கடந்த மாதம் 25ம் தேதி, கல்லுாரியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டனர். இந்த உத்தரவை ரத்து செய்து, மாணவர் அஸ்லம் தேர்வு எழுத அனுமதி கோரும் மனுவை, அவசர வழக்காக விசாரிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் ஏ.ராஜா முகமது முறையீடு செய்தார். இதை ஏற்ற நீதிபதி டி.வி.தமிழ்செல்வி அனுமதி வழங்கினார்.அஸ்லம் தாக்கல் செய்த மனுவில், 'ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவன உதவி பதிவாளர் அவினவ் தாக்கூர் மீது, ஜார்க்கண்டில் உள்ள பாலியல் புகார் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, கடந்த ஏப்., 4ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 'அதை மனதில் வைத்து, தேசத்துக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டதாக பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி, என்னை தற்காலிக நீக்கம் செய்துள்ளனர்' எனக் கூறப்பட்டுள்ளது.இந்த மனு, நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், பி.எம்.சுபாஷ் ஆஜராகினர்.நீதிபதி பிறப்பித்த உத்தரவு:மனுதாரர் மீது யூகத்தின் அடிப்படையில் மட்டுமே குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. முதலாம் ஆண்டில் அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்ற நிலையில், இரண்டாம் ஆண்டு தேர்வு எழுத அனுமதிக்கவில்லை எனில், ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படும். எனவே, மனுதாரரை தேர்வெழுத அனுமதிக்க வேண்டும். இந்த வழக்கில், ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் பதிலளிக்க வேண்டும். அந்த நிறுவனம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மனுதாரரின் கல்வி தொடர, நிறுவனத்தின், 'வாட்ஸாப்' குழுவிலும் அவரை சேர்க்க வேண்டும். விசாரணை வரும், 25ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

c.mohanraj raj
ஜூன் 01, 2025 20:27

இப்படியான நீதிபதிகள் தான் இந்தியாவிற்கு தேவை அப்பொழுதுதான் இந்தியாவை இல்லாமல் ஆக்க முடியும்


GMM
ஜூன் 01, 2025 07:36

அஸ்லம் மனுவில், உதவி பதிவாளர் அவினவ் தாக்கூர் மீது, ஜார்க்கண்டில் உள்ள பாலியல் புகார் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, ஏப்., 4ல் நடந்த ஆர்ப்பாட்டடத்தை மனதில் வைத்து, அஸ்லம் தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாக பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி, தற்காலிக நீக்கம் என்ற வாதமும் யூகம் தான். குற்ற சாட்டுக்கு உள்ளான மாணவர் தேர்வு எழுத மன்றம் அனுமதிப்பது தவறான முன் உதாரணம். போராட்ட குண மாணவர்கள் மூலம் பாதிப்பு கல்லூரிக்கு, தேசத்திற்கு தான் இருக்கும்.


உண்மை கசக்கும்
ஜூன் 01, 2025 07:32

நீதி இருக்கிறதா இறக்கிறதா? உண்மையை தீர விசாரித்ததா நீதிமன்றம்? புரியவில்லை.


தாமரை மலர்கிறது
ஜூன் 01, 2025 04:23

தவறான தீர்ப்பு.