உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தணடனை கைதிகளை வைத்து வேலை வாங்கினால் ... நடவடிக்கை: சிறைத்துறை அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தணடனை கைதிகளை வைத்து வேலை வாங்கினால் ... நடவடிக்கை: சிறைத்துறை அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை:'சிறையினுள் தண்டனை கைதிகளை பயன்படுத்தி, அலுவலகப் பணிகளை செய்வதை, ஒருபோதும் ஏற்க முடியாது; அவ்வாறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.குற்ற வழக்கில் தண்டனை பெற்ற கோதண்டன் என்பவர், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர், 30 நாட்கள் விடுப்பு கேட்டு, புழல் சிறை அதிகாரியிடம் விண்ணப்பித்தார். 'மூன்று ஆண்டுகள் தண்டனையை முடித்தால் மட்டுமே, விடுப்பு வழங்க முடியும்' என கூறி, கோதண்டன் விண்ணப்பத்தை, சிறை அதிகாரிகள் நிராகரித்தனர்.

விடுப்பு

இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் கோதண்டன் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் அக் ஷயா ஆஜராகி, ''சிறையில் மனுதாரர் ஒழுக்கமாக உள்ளார். சிறைத் துறையில் அதிகாரிகளுக்கு உதவியாக, அலுவலகப் பணிகளையும் செய்து வருகிறார். எந்தவித குற்றச்சாட்டும் சிறை அதிகாரிகள் சுமத்தவில்லை என்பதால், மனுதாரருக்கு விடுப்பு வழங்க வேண்டும்,'' என்றார்.இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது:பொதுவாக, தண்டனை கைதிகளுக்கு சிறையில் பணி வழங்கப்படும்; சமையல் போன்ற பணிகளை செய்வர். ஆனால், கைதி கோதண்டன், அதிகாரிகள் செய்யும் அலுவலகப் பணியான நிர்வாகப் பணியை செய்வதாக கூறப்படுகிறது. அரசு ஊழியர்கள் ஊதியத்தை வாங்கிக் கொண்டு, சிறை கைதிகளை வைத்து வேலை வாங்குவது எப்படி நியாயமாகும்?இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.அரசு தரப்பில், இதுகுறித்து விசாரித்து உறுதி செய்வதாக கூறப்பட்டது.இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:இது போன்ற செயல்களை ஏற்க முடியாது. ஊதியம் வாங்கும் அரசு ஊழியர்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை, அவர்களே தான் செய்ய வேண்டும்.

அரசு உறுதி

சிறையில் அலுவல் பணியை தண்டனை கைதி செய்வதை, ஒருபோதும் ஏற்க முடியாது. எனவே, தண்டனை கைதிகளை பயன்படுத்தி, சிறை நிர்வாகப் பணி மேற்கொள்ளப்படவில்லை என்பதை, அரசு உறுதி செய்ய வேண்டும்.இதன் பின்னும், எதிர்காலத்தில் இதுபோன்ற புகார் வந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், மனுதாரருக்கு 23 நாட்கள் விடுப்பு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை