சென்னை : ஊட்டி தொழிலாளர் நல நீதிமன்ற நீதிபதி தலையீடு காரணமாக, மாவட்ட கருவூல அதிகாரிக்கு எதிராக பதிவு செய்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. நீலகிரி மாவட்ட கருவூலத்துறை கண்காணிப்பாளர் பி.சரவணன். இவர், ஊட்டி நீதிமன்ற வளாகத்தில், தன் காரை நிறுத்த முயற்சித்துள்ளார். இதற்கு, தொழிலாளர் நல நீதிமன்ற உதவியாளர் ரஞ்சித்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சரவணன், ரஞ்சித்குமாரை ஆபாசமாக திட்டியதாகக் கூறப்படுகிறது. பின், உதவியாளர் அளித்த புகாரில், கருவூல அதிகாரி சரவணனுக்கு எதிராக, ஊட்டி டவுன் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சரவணன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.பிரபாகர் ஆஜராகி வா தாடியதாவது: 'மனுதாரருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கான காரணம் வேறு. நீலகிரி மாவட்ட நீதித் துறை அதிகாரிகள், சந்தேகத்துக்கு இடமான வகையில், 'பில்'களை சமர்ப்பித்துள்ளனர். மனுதாரர், இதற்கு ஒப்புதல் அளிக்காமல் நிராகரித்துள்ளார். மனுதாரர் விடுமுறையில் இருந்தபோது, திரும்ப அந்த பில்களை சமர்ப்பித்து, பணம் பெற்றது தொடர்பாக, உயர் நீதிமன்ற விஜிலன்ஸ் பதிவாளரிடம், மனுதாரர், கடந்த மார்ச் 10ல் ஊட்டி நீதித்துறை அதிகாரிகள் பெயரை குறிப்பிட்டு, அவர்களுக்கு எதிராக புகார் அளித்துள்ளார். இந்த முன்விரோதம் காரணமாக, ஊட்டி தொழிலாளர் நல நீதிமன்ற நீதிபதி, அவரது மனைவியான நீதித் துறை அதிகாரி ஆகியோரின் தலையீட்டால், மனுதாரருக்கு எதிராக பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் வாதாடினார். காவல் துறை தரப்பில், 'அனுமதியின்றி, மனுதாரர் நீதிமன்ற வளாகத்தில் காரை நிறுத்தி உள்ளார். இதை கேட்ட உதவியாளரை ஆபாசமாக திட்டி, அவரை பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார்' என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்று, சரவணன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.