நெடுஞ்சாலை பணி: கலெக்டர்களுக்கு அமைச்சர் உத்தரவு
சென்னை; முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி, மாநில நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு தலைமையில், தேசிய நெடுஞ்சாலை பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் தலைமை செயலகத்தில் நடந்தது. இதில், வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரன், நெடுஞ்சாலை துறை செயலர் செல்வராஜ் உள்ளிட்டோரும், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக மாவட்ட கலெக்டர்களும் பங்கேற்றனர்.இக்கூட்டத்தில் அமைச்சர் வேலு பேசியதாவது:நிலம் எடுப்பு, உயர் மின் அழுத்த கோபுரங்களை மாற்றி அமைப்பது, வனத்துறை அனுமதி பெறுவதில் சிக்கல் உள்ளிட்ட காரணங்களால், தேசிய நெடுஞ்சாலை பணிகள் தாமதமாகின்றன. இந்த பணிகளை, தொடர்புடைய துறை அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.சென்னை - பெங்களூரு சாலை விரிவாக்கத்திற்கு, 81 கி.மீ., நீளத்திற்கு உயர் மின் அழுத்த கோரபுரங்களை மாற்றி அமைக்காததால் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை கலெக்டர்கள், இதில் தனி கவனம் செலுத்த வேண்டும்.ஆக்கிரமிப்பை அகற்றாததால், சென்னை - திருப்பதி நான்கு வழிச்சாலை பணிகள் நிலுவையில் உள்ளன. நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கு துறையின் செயலர்கள், மாவட்ட கலெக்டர்கள், நில எடுப்பு அலுவலர்கள் இணைந்து செயல்பட வேண்டும். சாலை பணிகளுக்கு கனிம வளங்களை பயன்படுத்த, சுற்றுச்சூழல் துறை காலதாமதம் இன்றி அனுமதி வழங்க வேண்டும். சாலை பணிகளில் ஏற்படும் காலதாமதத்தால் ஏற்படும் நிதியிழப்பு, பொருளாதார வளர்ச்சி பாதிப்பு உள்ளிட்டவற்றை, நீதிமன்றங்களில் வழக்கு விசாரணையின் போது சுட்டிக்காட்ட வேண்டும். வழக்கை விரைந்து முடிக்க கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.