அம்மா திருமண மண்டபங்களுக்கு வாடகை நிர்ணயித்தது வீட்டு வாரியம்
சென்னை: சென்னை, மதுரை நகரங்களில் கட்டப்பட்ட, 'அம்மா' திருமண மண்டபங்களை நேரடியாக வாடகைக்கு விட முடிவு செய்த வீட்டுவசதி வாரியம், அதற்கான வாடகை விபரங்களை அறிவித்துஉள்ளது. சென்னை, மதுரை நகரங்களில், ஐந்து இடங்களில், அம்மா திருமண மண்டபங்கள் கட்ட, கடந்த அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன்படி, சென்னையில் வேளச்சேரி, கொரட்டூர், அயப்பாக்கம், ஆவடி ஆகிய இடங்களிலும், மதுரை அண்ணா நகர் பகுதியிலும், திருமண மண்டபங்கள் கட்டப்பட்டன. கடந்த ஆட்சிக் காலத்திலேயே இதற்கான கட்டுமான பணிகள் முடிந்து, திறப்பு விழாவும் நடத்தப்பட்டது. இந்த மண்டபங்களை தனியார் ஒப்பந்ததாரர் வாயிலாக பராமரிக்கவும், வாடகைக்கு விடவும் வீட்டுவசதி வாரியம் முடிவு செய்தது. இதற்கான டெண்டர் அறிவிப்புகள், மீண்டும் மீண்டும் வெளியிடப்பட்ட போதும், யாரும் பங்கேற்க முன்வரவில்லை. இதனால், இந்த மண்டபங்கள் முடங்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், திருமண மண்டபங்களை நேரடியாக வாடகைக்கு விடும் பணிகளை, வீட்டுவசதி வாரியம் துவக்கி உள்ளது. இதன்படி, வேளச்சேரி மண்டபத்துக்கான வாடகை, கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஆவடியில் உள்ள திருமண மண்டபத்துக்கான ஒரு நாள் வாடகை, 1.50 லட்சம் ரூபாய், அரை நாள் வாடகை, 75,000 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, மதுரை அண்ணா நகர் திருமண மண்டபத்துக்கான ஒரு நாள் வாடகை, 50,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தேனி - வீரபாண்டி பிரதான சாலையில் கட்டப்பட்ட திருமண மண்டபத்துக்கு, ஒரு நாள் வாடகை, 70,000 ரூபாய். இந்த மண்டபங்களை வாடகைக்கு எடுக்க, சம்பந்தப்பட்ட கோட்ட அலுவலகங்களை அணுகலாம் என, வீட்டுவசதி வாரியம் அறிவித்து உள்ளது.