உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணன் வாங்கிய கடனுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? ஐகோர்ட்டில் நடிகர் பிரபு வாதம்

அண்ணன் வாங்கிய கடனுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? ஐகோர்ட்டில் நடிகர் பிரபு வாதம்

சென்னை:நடிகர் சிவாஜி வீட்டை ஜப்தி செய்யும்படி பிறப்பித்த உத்தரவை நீக்குமாறு, நடிகரும், அவரது மகனுமான பிரபு தரப்பு கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடனுக்கு ஈடாக கணிசமான தொகையை டிபாசிட் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.மறைந்த நடிகர் சிவாஜியின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர், பங்குதாரர்களாக உள்ள, 'ஈசன் சினிமா' தயாரிப்பு நிறுவனம், ஜகஜால கில்லாடி என்ற படத்தை தயாரித்தது. இப்படத்தை தயாரிப்பதற்கு, 'தனபாக்கியம் என்டர்பிரைசஸ்' என்ற நிறுவனத்திடம், துஷ்யந்த் 3 கோடி, 74 லட்சத்து, 75 ஆயிரம் ரூபாயை, கடன் வாங்கி இருந்தார். கடன் தொகையை திருப்பித் தராததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் 'தனபாக்கியம் என்டர்பிரைசஸ்' நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

ஏலம் விட கோரிக்கை

அப்போது, நீதிமன்ற உத்தரவுபடி நியமிக்கப்பட்ட மத்தியஸ்தர் தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், சென்னை தி.நகரில் உள்ள நடிகர் துஷ்யந்தின் தாத்தாவான சிவாஜி கணேசனின், 'அன்னை இல்லம்' வீட்டை ஜப்தி செய்து, பொது ஏலம் விடுமாறு, கடன் கொடுத்த தனபாக்கியம் நிறுவனம் வாதிட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நடிகர் சிவாஜி வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. ஜப்தி உத்தரவை நீக்கக் கோரி, நடிகர் பிரபு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி அப்துல் குத்துாஸ் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

ஒன்றாக வசிக்கிறீர்கள்

பிரபு தரப்பில், 'என் சகோதரர் குடும்பம் வாங்கிய கடனுக்கு, என் சொத்தை ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தேன். அது எவ்வாறு முறையாகும்; சகோதரர் குடும்பம் வாங்கிய கடனுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?' என்று வாதாடப்பட்டது.அப்போது குறுக்கிட்ட நீதிபதி, 'ராம்குமார் உங்கள் சகோதரர் தானே... ஒன்றாக தானே வசிக்கிறீர்கள்... அவ்வாறு இருக்கும் போது, கடன் தொகைக்கு பொறுப்பு இல்லை என, எப்படி சொல்ல முடியும்' என, கேள்வி எழுப்பினார். தனபாக்கியம் நிறுவனம் சார்பில், நீதிமன்ற உத்தரவை அடுத்தே, சொத்து மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ஜப்தி நடவடிக்கையை நீக்க வேண்டும் என்ற பிரபு கோரிக்கையை நிராகரித்தார். மேலும், கடனுக்கான அசல் தொகைக்கு ஈடாக, ஒரு கணிசமான தொகையை, டிபாசிட் செய்ய பிரபுவுக்கு உத்தரவிட்டு, வழக்கை ஜூன் 5ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை