மாற்று திறனாளிகள் எத்தனை பேர்? ஊரக வளர்ச்சி துறை கணக்கெடுப்பு
சென்னை:மாற்றுத்திறனாளிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி, இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய, ஊரக வளர்ச்சி துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம், உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ், கிராமங்களில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவிகள், வேலைவாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்ய, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.அதற்காக கிராமங்களில் உள்ள மாற்றுத் திறனாளிகள் குறித்த விபரங்களை சேகரித்து, இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய, ஊரக வளர்ச்சி துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.இது குறித்து, ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டத்தின் கீழ், ஏற்கனவே அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது, அவர்கள் குறித்த கூடுதல் தகவல்களை சேகரித்து, பிரத்யேகமாக தொகுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஊராட்சி வாரியாக மாற்றுத்திறனாளிகள் பட்டியலை சரிபார்க்க வேண்டும். பட்டியலில் விடுபட்டு இருந்தால், ஊராட்சி தரவு கணக்கெடுப்பாளருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்களுக்கு தனித்துவ அடையாள அட்டை வழங்கும் பணி, நவம்பர் மூன்றாவது வாரம் வரை நடக்க உள்ளது. மாற்றுத்திறனாளிகள் தங்கள் பெயர், பிறந்த தேதி, மொபைல் போன் எண் உள்ளிட்ட விபரங்களை, https:/tnrights.tnega.org/registration என்ற இணையதளத்தில், சுயமாக பதிவேற்றம் செய்யவும் வசதி செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.