உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கைதான போலீசாரிடம் மனித உரிமை கமிஷன் விசாரணை

கைதான போலீசாரிடம் மனித உரிமை கமிஷன் விசாரணை

மதுரை: திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கில் கைதான போலீசாரிடம், மதுரை மத்திய சிறையில் மாநில மனித உரிமைகள் கமிஷன் உறுப்பினர் கண்ணதாசன் விசாரணை நடத்தினார்.சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் காளி கோவில் காவலாளி அஜித்குமார், 30; பேராசிரியை நிகிதாவின் நகை மாயம் குறித்த புகாரில் தனிப்படை போலீசாரால் விசாரிக்கப்பட்ட போது இறந்தார். கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு, போலீசார் பிரபு, கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா, ஆனந்த் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.அஜித்குமார் இறந்தது குறித்து, மாநில மனித உரிமைகள் கமிஷன் தானாக முன்வந்து விசாரணையை துவக்கியது. சம்பவம் குறித்து விரிவாக விசாரணை நடத்தி ஆறு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐ.ஜி.,க்கு உத்தரவிட்டது. இந்நிலையில், மதுரை மத்திய சிறையில் நேற்று முன்தினம் மனித உரிமை கமிஷன் உறுப்பினர் கண்ணதாசன் விசாரணை நடத்தினார். கைதிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அஜித்குமார் இறந்த வழக்கில் கைதான போலீசாரிடமும், நடந்த விபரங்களை கேட்டறிந்து, 'சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்று உறுதியளித்தார். மாலை, 4:00 முதல், 6:00 மணி வரை சிறை வளாகம், பெண்கள் சிறையில் ஆய்வு செய்தார். சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் உடனிருந்தார். போலீசார் கூறுகையில், 'ஒவ்வொரு மாதமும் கண்ணதாசன், மதுரை சர்க்யூட் ஹவுசில் மனிதஉரிமை மீறல் புகார் குறித்து விசாரிப்பது வழக்கம். ஆண்டுக்கு ஒருமுறை மதுரை சிறை கைதிகளிடம் மனித உரிமை மீறப்பட்டுள்ளதா என்று நேரில் விசாரிப்பார். அந்த வகையில் நேற்று முன்தினம் விசாரித்தார்' என்றனர்.

விசாரணைக்கு ஆஜர்

இதற்கிடையில், அஜித்குமார் கொலை தொடர்பாக, ஐகோர்ட் உத்தரவுப்படி மதுரை மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ், திருப்புவனத்தில் 4வது நாளாக விசாரணை நடத்தி வருகிறார். போலீசார், கோவில் ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடந்தது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட மானாமதுரை டி.எஸ்.பி., சண்முகசுந்தரம் நேற்று காலை, 10:00 மணிக்கு விசாரணைக்கு ஆஜரானார். மதியம், 12:25க்கு விசாரணை முடிந்து வெளியே வந்தவரிடம், பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்க வேகமாக ரோட்டில் சென்ற ஆட்டோவை மறித்து ஏறி சென்றார்.

வலைதளங்களில் பதிவு

அஜித்குமார் கொலை விவகாரத்தில், சமூக வலைத்தளங்களில் போலீசுக்கு எதிராக அனைத்து தரப்பினரும் பதிவுகளை போட்டு வருகின்றனர். போலீஸ் மீது ஏற்பட்டுள்ள இத்தகைய களங்கத்தை போக்கும் வகையில், மானாமதுரை சப் - டிவிஷனுக்குட்பட்ட ஸ்டேஷன்களில் பணியாற்றும் போலீசார், தங்களது மொபைல் போன்கள் வாயிலாக, 'வாட்ஸாப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம்' போன்ற சமூக வலைத்தளங்களில், போலீஸ் மீது மரியாதையை ஏற்படுத்தும் வகையிலான பதிவுகளை அப்லோடு செய்து வருகின்றனர். அவர்களின் குடும்பத்தினர்களும், உறவினர்களும் இதேபோன்ற பதிவுகளை அப்லோடு செய்கின்றனர்.

போலீசார் சிலர் கூறியதாவது:

அஜித்குமார் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட போலீசார், அவர்கள் செய்த தவறுக்கு தண்டனையை அனுபவித்து வருகின்றனர். பொதுமக்கள் மத்தியில் ஏற்கனவே போலீசின் மீது நன்மதிப்பை விட வெறுப்பே கூடுதலாக உள்ளது. இந்த நிலையில், இச்சம்பவம் மேலும் வெறுப்பை உண்டாக்கியுள்ளது. ஒட்டு மொத்த போலீசின் மீது விழுந்த களங்கத்தை சிறிதாவது குறைக்கும் வகையில், வலைத்தளங்களில் பதிவுகளை போட்டு வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

RanganathanS
ஜூலை 07, 2025 11:51

என்ன வேடிக்கை. அடுத்தவர்களின் கை வலிக்குதா ன்னு விசாரிக்கிறாரோ


ஆரூர் ரங்
ஜூலை 06, 2025 12:36

முன்னாள் நீதிபதி கண்ணதாசன் அவர்களா? அதாவது முக வீட்டு சம்பந்தியா?.


pandit
ஜூலை 06, 2025 09:31

போலீசார் கொடுமைப்படுத்த படுகிறார்கள். கண்ணதாசன் கண்டுபிடிப்பு.. அஜித்? யாரது?


R VENKATARAMANAN
ஜூலை 06, 2025 08:45

The persons involved in the crime, whether public or police, should be hanged in a public platform without any delay or enquiry. so that such barbarian activities may not happen in the future.


Oviya vijay
ஜூலை 06, 2025 07:45

கண்ணதாசன் தீய மூ கா வின் கொள்கை பரப்பு செயலாளர். அவரின் விசாரணை அவலம்