விரக்தியில் இருப்போர் குறித்து எனக்கு தெரியாது: பழனிசாமி
திருப்பத்துார் : திருப்பத்துாரில் நேற்று, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி அளித்த பேட்டி: முன்னாள் எம்.பி., மைத்ரேயன், முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா ஆகியோர் தி.மு.க.,வில் இணைந்துள்ளனர். அதேபோல, முன்னாள் அமைச்சர் தங்கமணி உள்ளிட்டோர் விரக்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது குறித்து எனக்கு தெரியாது. உட்கட்சி விவகாரம் அது. அதை பகிரங்கமாக பொது வெளியில் பேச முடியாது. கட்சிக்குள் என்ன நடக்கிறது என்பது எனக்கு மட்டும் தான் தெரியும். தி.மு.க.,வில் இணைந்திருக்கும் மைத்ரேயன், 'உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது' என, என்னை குறிப்பிட்டு பேசியுள்ளார். தி.மு.க.,வில் இருந்து கொண்டு என்னை வாழ்த்தியா பேச முடியும்? இந்திய நாடு, சுதந்திர நாடு; ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் எந்த கட்சியிலும் சேரலாம். அன்வர் ராஜா, மைத்ரேயன் போன்றோர் ஏற்கனவே கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள். பின், வருத்தம் தெரிவித்து, மீண்டும் கட்சியில் இணைந்தனர்; தற்போது, மீண்டும் வெளியேறி உள்ளனர். இவர்களை போன்றோர், எந்த கட்சியிலும் நிலையாக இருக்க மாட்டார்கள். அ.ம.மு.க., தினகரனுடன் ஒன்றாக மேடையில் ஏறுவேன் என, பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளது குறித்து எனக்கு தெரியாது. அதற்கு, அவர் தான் விளக்கம் சொல்ல வேண்டும். அ.தி.மு.க., தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளது. எதை எப்படி செய்ய வேண்டும் என எங்களுக்கு தெரியும். தேர்தலுக்குள் நிறைய கட்சிகள், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்குள் வரும். இவ்வாறு அவர் கூறினார்.