உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துணை ஜனாதிபதியானால் அரசியலமைப்பை பாதுகாப்பேன்: சுதர்சன் ரெட்டி பேச்சு சுதர்சன் ரெட்டி பேச்சு

துணை ஜனாதிபதியானால் அரசியலமைப்பை பாதுகாப்பேன்: சுதர்சன் ரெட்டி பேச்சு சுதர்சன் ரெட்டி பேச்சு

சென்னை: ''நான் துணை ஜனாதிபதியாக வாய்ப்பு அளித்தால், அரசியலமைப்பை பாதுகாப்பேன்,'' என, 'இண்டி' கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி கூறினார். எதிர்க்கட்சிகள் இடம் பெற்ற, 'இண்டி' கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளரான சுதர்சன் ரெட்டி நேற்று தமிழகம் வந்தார். முதல்வர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து, அவர் ஆதரவு திரட்டினார். சென்னை தி.நகரில் உள்ள அக்கார்டு ஹோட்டலில் நடந்த தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், எம்.பி.,க்கள் கூட்டத்தில், சுதர்சன் ரெட்டி பேசிய தாவது: தமிழகத்தின் திராவிட தலைவர்களையும், தமிழ் மொழியையும், அதன் கலாசாரத்தையும் வணங்குகிறேன். தமிழகம், கல்வி மற்றும் சுகாதாரத்தில், தொலைநோக்கு பார்வையுடன், நாட்டையே வழிநடத்திக் கொண்டிருக்கிறது. நான் நீதிபதியாக இருந்த போது, பல்வேறு வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளேன். தற்போது எனக்கான தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். எனக்கு வாய்ப்பு அளித்தால், இந்தியாவின் அரசியலமைப்பை பாதுகாக்க பாடுபடுவேன். முதல்வர் ஸ்டாலின், புதிய கருத்தாக்கங்களை உருவாக்குவதில் சாம்பியனாக திகழ்கிறார். மிக தைரியமாக தமிழகத்தை வழிநடத்துகிறார். கூட்டாட்சி தத்துவத்தை நிலைப்படுத்திட, அதற்கு எதிரான சக்திகளை எதிர்த்து போராடி வருகிறார். தற்போது, நகராட்சி மன்றங்களுக்கு இணையாக, மாநில அரசுகளின் அதிகாரங்களை குறைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய சூழலில், நாட்டில் கூட்டாட்சிக்கு மட்டுமல்லாது, அரசியலமைப்பு சட்டத்திற்கும் ஆபத்து நிலவுகிறது. ஒரே நாடு குறித்து பலர் பேசி வருகின்றனர். இது, அரசியலமைப்புக்கு எதிரானது. நாம் அனைவரும் ஒரே நாடு தான். மாநிலங்களின் ஒன்றியம் தான் இந்தியா. மாநிலங்கள் இல்லையெனில், இந்திய ஒன்றியம் இல்லை. நான் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல், என்னை பற்றி எதிர்க்கட்சியினர் பேச துவங்கி உள்ளனர். 'உங்களின் வாழ்க்கையில், இதுவரை அரசியலில் பணியாற்றியதே இல்லையே' என்கின்றனர். அவர்கள் ஒன்றை மறந்து விட்டனர். 'யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம்' என, அரசியலமைப்பு கூறுகிறது. நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. எந்த கட்சியிலும் சேர மாட்டேன். என் மீது நம்பிக்கை வைத்த, 'இண்டி' கூட்டணிக்கு நன்றி. உங்கள் அனைவருக்கும் நான் சத்தியம் செய்கிறேன். அரசியலமைப்பை பாதுகாக்காமல் நான் வீழ மாட்டேன். இவ்வாறு அவர் பேசினார். தமிழர் என்ற முகமூடி அணிந்து ஆதரவு கேட்பது பழைய 'டிரிக்' துணை ஜனாதிபதி வேட்பாளரான சுதர்சன் ரெட்டி அறிமுக கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சட்டம், நீதிக்காக, சுதர்சன் ரெட்டி தன்னையே அர்ப்பணித்துள்ளார். நீதிபதியாக பணியாற்றிய காலத்தில், நேர்மையாக, சுதந்திரமாக செயல்பட்டுள்ளார். மக்களின் உரிமைகளையும், சமூக நீதியையும் உயர்த்தி பிடித்தார். அரசியலமைப்பு சட்டத்தின் மாண்பை போற்றி பாதுகாத்தார். அரசியலமைப்பு சட்டத்தை பா.ஜ., சிதைக்க நினைக்கிறது. அதை பாதுகாக்கும் பொறுப்புக்கு, சுதர்சன் ரெட்டி தேவைப்படுகிறார். இவர் தமிழகத்திற்கும், தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு அளிக்கக் கூடியவர். அரசியல் அமைப்பு சட்டத்திற்காகவும், தமிழகத்திற்காகவும், மக்களுக்காகவும் பேசுகிறவரை நான் முன்மொழிய பெரிய காரணம் தேவையில்லை. இவரை நக்சல் என, உள்துறை அமைச்சர் சொல்கிறார். தன் பொறுப்பை மறந்து, முன்னாள் நீதிபதி குறித்து அபாண்டமாக பேசியுள்ளார். அவர்களால் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியவில்லை. அந்த கையாலாகாத நிலையை மறைக்க, நீதிபதி மீது பழி போட்டு தப்பிக்க பார்க்கின்றனர். அரசியலமைப்பு சட்டமே ஆபத்தில் சிக்கியுள்ளது. இந்த சூழலில், இந்தியாவின் அடிப்படை கொள்கையான, மத சார்பின்மை, கூட்டாட்சி தத்துவம், சமூக நீதி, வேற்றுமையில் ஒற்றுமை மீது நம்பிக்கை கொண்டவராக சுதர்சன் ரெட்டி கிடைத்துள்ளார். நாம் அவரை ஆதரிக்க வேண்டும். தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் பா.ஜ., செய்து விட்டு, தமிழர் என்ற முகமூடி அணிந்து ஆதரவு கேட்கின்றனர். இது, பழைய டிரிக். தனி மனிதரை விட தத்துவம் தான், அரசியலை வழி நடத்தும். தனி மனிதர்கள் என்பவர்கள் வெறும் பிம்பங்கள் தான். அதனால், எந்த கருத்தியல் மக்களுக்கான கருத்தியலாக இருக்கிறதோ, அதைத்தான் ஆதரிக்கிறோம். எனவே, சுதர்சன் ரெட்டியை துணை ஜனாதிபதியாக வெற்றி பெற வைக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார். கமல் புறக்கணிப்பு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான கமல், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ளார். அவர் நேற்று துணை ஜனாதிபதி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கூட்டத்தில் பங்கேற்க, அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா என்பது தெரியவில்லை. நேற்று காலை சென்னை வர்த்தக மையத்தில் நடந்த ரோட்டரி கிளப் விழாவில், கமல் பங்கேற்றார். அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. மாலை போர்ட்கிளப் வீட்டில் இருந்தவர், சுதர்சன் ரெட்டிக்கு ஆதரவு அளிக்கும் கூட்டத்தில் பங்கேற்காதது, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

sankar
ஆக 25, 2025 12:34

முகவரி தவறு எனும்போது முழுதுமே தவறாகத்தான் இருக்கும்


karthik
ஆக 25, 2025 11:52

இடையூறாக தான் இருப்பீங்க


Mohan
ஆக 25, 2025 11:01

யாரு உங்க கூட்டம் தான் அரசியல் அமைப்பை சிதைக்கிறது, வெக்கமே இல்லாம பேசிட்டு திரியுறீங்க எப்படியும் அவங்களுக்கு தான் மெம்பெர்ஸ் ஜாஸ்தி ..அவுங்க தான் ஜெயிப்பாங்க ..சும்மா நாங்களும் இன்னும் ஒற்றுமையா தான் இருக்கோம் ..நாட்டை சீரழிக்க அப்டினு நினைவு படுத்திட்டே இருகாங்க இவுங்க ...


S. Neelakanta Pillai
ஆக 25, 2025 07:12

இவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் போது அரசியலமைப்பு சட்டத்தை எப்படி பாதுகாத்தார் என்று விளக்கினால் நல்லது. ஏற்கனவே ஒரு மிகப்பெரிய பதவி இவருக்கு வழங்கப்பட்டு அதில் இவர் என்ன சாதனை செய்தார் அந்தப் பட்டியல் எங்கே இவர் ஒழுங்காக செயல்பட்டிருந்தால் இப்போது வந்து நான் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பேன் என்று சொல்ல வேண்டிய அவசியம் வந்திருக்காதே இதுபோன்ற திறமையற்றவர்களை நம்பி இனிமேலும் மக்கள் ஏமாற தயாராக இல்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை