மதுரை: “சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி என் தலைமையில் அமையும். அமித் ஷாவே முடிவெடுத்து அறிவித்து விட்டார்,” என மதுரை அ.தி.மு.க., நிர்வாகிகளிடம், அக்கட்சியின் பொதுச்செயலர் இ.பி.எஸ்., மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில், தமிழகம் முழுதும் இ.பி.எஸ்., பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார். நான்காம் கட்ட பயணத்தில் செப்., 1 முதல், மதுரை, விருதுநகர், தேனி மாவட்டங்களில் நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் செய்தார். மதுரை ரிங் ரோட்டில் உள்ள ஹோட்டலில் மூன்று நாட்கள் தங்கியிருந்த அவர், கட்சி நிர்வாகிகளையும், பா.ஜ.,வினரையும் சந்தித்து பேசினார். மதுரையில் முகாமிட்டிருந்தபோதுதான் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பன்னீர்செல்வமும், தினகரனும் விலகுவதாக அறிவித்தனர். இது இ.பி.எஸ்.,க்கு உற்சாகத்தை ஏற்படுத்தினாலும் கட்சியினரும், பா.ஜ.,வினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அ.தி.மு.க., கூட்டணியில் தன்னையும், பன்னீர்செல்வத்தையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என பாடுபட்ட தினகரனுக்கு, பா.ஜ., தரப்பில் இருந்தும் பச்சைக்கொடி காட்டப்படாததால், கூட்டணியில் இருந்து தினகரன் விலகி உள்ளார். இதற்கிடையில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இ.பி.எஸ்., செயல்பாட்டை விமர்சிப்பார் என எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில், மதுரையில் தங்கியிருந்த இ.பி.எஸ்., கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம், அடுத்த கட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, அவர்களிடம் பேசிய இ.பி.எஸ்., “பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்துக் கொண்டபோதே, நான் தான் முதல்வர் வேட்பாளர் என பேசி முடிக்கப்பட்டது. ஆனாலும், பா.ஜ.,வைச் சேர்ந்த தலைவர்கள் சிலர், அதில் குழப்பம் விளைவிக்க முயன்றனர். ''ஆனால், இந்த விஷயத்தில் அமித் ஷா தெளிவாக இருந்து விட்டார். நான் தான் முதல்வர் வேட்பாளராக இருப்பேன் என்று உறுதியாக தெரிவித்து விட்டார். ஒரே நெருடலாக இருந்த அண்ணாமலை வாயாலும், நான் தான் முதல்வர் வேட்பாளர் என்பதை அமித் ஷா சொல்ல வைத்து விட்டார். ''அமித் ஷா முடிவால், எல்லா குழப்பங்களும் தீர்ந்து விட்டன. அமித் ஷா முடிவு செய்தால், அது வெற்றியில் தான் முடியும்,” என உற்சாகமாக பேசி உள்ளார். இது, கட்சி நிர்வாகிகளையும் உற்சாகமடையச் செய்துள்ளது.