வீட்டில் பிரசவம் பார்த்தால் தாய், குழந்தை உயிருக்கு ஆபத்து
சென்னை:''இயற்கை முறையில் பிரசவம் என நினைத்து, வீடுகளிலேயே பார்க்கப்படும் பிரசவங்கள், தாய் மற்றும் குழந்தையின் உயிருக்கு ஆபத்தாக முடியும்,'' என, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறினார். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மனோகரன். காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் அடுத்த நந்தம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவரது மனைவி சுகன்யா, 32. இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவதாக சுகன்யா கருவுற்றார். அவருக்கு சமீபத்தில், அவரது வீட்டிலேயே மனோகரன் பிரசவம் பார்த்துள்ளார். ஆண் குழந்தை பிறந்தது.மகிழ்ச்சி அடைந்த அவர், 1,024 பேர் அடங்கிய, 'வாட்ஸாப்' குழுவில், வீட்டிலேயே சுகப்பிரவசம் பார்ப்பது குறித்த தகவலை பகிர்ந்திருந்தார். இது குறித்து, வட்டார மருத்துவ அலுவலர் குன்றத்துார் போலீசில் புகார் அளித்தார். இந்த விவகாரத்தில், தாய் மற்றும் குழந்தை நலமுடன் இருப்பதால், மனோகரனை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.இந்நிலையில், ''வீடுகளிலேயே பார்க்கப்படும் பிரசவங்கள், தாய் மற்றும் குழந்தையின் உயிருக்கு ஆபத்தாக அமைந்து விடும்,'' என, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் எச்சரித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:இயற்கை பிரசவம் வேறு; வீட்டு பிரசவம் வேறு. இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். வீடுகளிலேயே பிரசவம் பார்க்கும்போது, திடீரென ஏற்படும் சிக்கலான நிலையை சமாளிக்க முடியாத நிலை ஏற்படும். இதனால், தாய் அல்லது குழந்தை அல்லது இருவரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம். எவ்வித பிரச்னையும் இல்லாத கர்ப்பிணியருக்கும், எந்நேரங்களிலும் சிக்கல் ஏற்படலாம். குறிப்பாக, 10 சதவீத பிரசவங்கள், திடீரென ஏற்படும் சிக்கலாகவே உள்ளது. முக்கியமாக, பிரசவத்தின்போது தாய்க்கு, அதிக ரத்தப்போக்கு, நோய் தொற்று, குழந்தைக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம். எனவே, வீடுகளில் பிரசவம் பார்ப்பதை ஊக்குவிக்கக் கூடாது. இதுபோன்ற மனநிலையில் இருப்போருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மருத்துவமனைகளில் பிரசவம் பார்க்கும்போது, திடீரென ஏற்படும் ஆபத்து நேரத்தில், இருவரையும் காப்பாற்ற முயற்சிகள் எடுக்கப்படும். வீடுகளில் பார்க்கும் போது, ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்குள் அசம்பாவிதம் ஏற்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.