சென்னை:குண்டு வெடிப்பு வழக்குகளில், 'பிடி வாரன்ட்'டை அமல்படுத்தாமல் அவகாசம் கேட்டதால், 'கியூ' பிரிவு ஐ.ஜி.,க்கு, 1.25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது, சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம். கடந்த, 1990 மற்றும் 1991ல் சென்னை, 'கியூ' பிரிவு போலீசாரால், 'தடா' சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மூன்று குண்டுவெடிப்பு வழக்குகள்.பின் சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களின், 'கியூ' பிரிவு போலீசாரால், 1991ல், 'தடா' சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இரு வழக்குகள், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள, 5வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.கடந்த, 32 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள இந்த வழக்குகளில், தேடப்படும் குற்றவாளிகள் பலருக்கு, 'பிடி வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இந்த வாரன்ட்களை சம்பந்தப்பட்ட போலீசார் அமல்படுத்தவில்லை.இந்நிலையில், இந்த வழக்குகள், 5வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜெ.சந்திரன் முன் விசாரணைக்கு வந்தன.அப்போது, போலீசார் தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராகி, பிடிவாரன்ட்டை அமல்படுத்த அவகாசம் கோரினார். அதை ஏற்க மறுத்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு:ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும்படி, உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் கூறுகின்றன.ஆனால், 32 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள இந்த வழக்குகளில், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. நீதிமன்ற உத்தரவையும் போலீசார் அமல்படுத்தவில்லை.இதுகுறித்து, டி.ஜி.பி., உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு பல முறை கடிதம் எழுதியும், எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே, இந்த ஐந்து வழக்குகளில் சம்மந்தப்பட்ட, 'கியூ'பிரிவு ஐ.ஜி.,க்கு, ஒவ்வொரு வழக்குக்கும் தலா 25,000 ரூபாய் வீதம், மொத்தம், 1.25 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.இந்த தொகையை சம்பந்தப்பட்ட ஐ.ஜி., நவ., 29ம் தேதிக்குள், சென்னை மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழுவில், 'டிபாசிட்' செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.