சென்னை: சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக, ரேஷன் கடைகளுக்கு பருப்பு, பாமாயில், 'சப்ளை' செய்யும் அரசு ஒப்பந்ததாரர், வி.சி., துணை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜூனா வீடு, அலுவலகம் உட்பட, 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.கோவையை சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜூனா. இவர், வி.சி., கட்சியில் பிப்ரவரியில் சேர்ந்தார். உடனே, இவருக்கு துணை பொதுச்செயலர் பதவி வழங்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சமீபத்தில், வி.சி., சார்பில், திருச்சியில், 'வெல்லும் ஜனநாயகம்' என்ற மாநாடு நடத்தப்பட்டது. இதற்கு, கோடிக்கணக்கான ரூபாயை ஆதவ் அர்ஜூனா தான் செலவு செய்தார் என்று கூறப்படுகிறது. இவர் மீது ஏற்கனவே, சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருகிறார்; வரி ஏய்ப்பு செய்கிறார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பாக, வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர். அதன் அடிப்படையில், சென்னை போயஸ்கார்டன் கஸ்துாரி ரங்கன் சாலையில், பாஷ்யம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஆதவ் அர்ஜூனா வீடு, அதேபகுதியில் இவர் நடத்தி வரும் நிதி நிறுவன அலுவலகம் மற்றும் அபிராமபுரம் பிரதான சாலையில் உள்ள அலுவலகம் ஆகியவற்றில், நேற்று எட்டுக்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.அதேபோல, கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவர், ஜவுளி நிறுவனம் நடத்தி வருகிறார். அரசு நடத்தும் ரேஷன் கடைகளுக்கு பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை கொள்முதல் செய்து தரும் ஒப்பந்ததாரராக உள்ளார். தொடர் சோதனை
இதற்காக, அருணாச்சலா இம்பெக்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் அலுவலகம், சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ளது. பாரிமுனையிலும் அலுவலகத்தை நடத்தி வருகிறார். இவரது வீடு அபிராமபுரத்தில் உள்ளது. இந்த இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.சென்னை வேப்பேரியில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசிப்பவர், மஹாவீர் இரானி. இவர், பைனான்ஸ் மற்றும் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இவரும், சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளார். இவரது வீடு மற்றும் அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் ஒரே நேரத்தில், 100க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோரின் வீடு, அலுவலகம் என, சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனை தொடர்கிறது.அதேபோல, கோவை, ராமநாதபுரம் அடுத்த கிருஷ்ணசாமி நகரை சேர்ந்தவர் அனீஸ், 27; ராமநாதபுரம் பகுதியில் கார் ஷோரூம் வைத்துள்ளார். இவரது வீட்டுக்கு நேற்று காலை, 8:00 மணியளவில், மூன்று கார்களில், 15க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள், அனீஸ் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், இந்த சோதனை நடந்து வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.அமலாக்கத்துறை அதிகாரிகள், வீட்டில் உள்ள ஆவணங்களை கைப்பற்றி, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுஉள்ளனர்.