தேசிய அளவில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ஊக்கத்தொகை
சென்னை:தேசிய அளவில் உத்தரகாண்டில் நடந்த போட்டியில், பதக்கம் வென்ற, தமிழக வீரர் - வீராங்கனையருக்கு, உயரிய ஊக்கத்தொகையாக, 4.35 கோடி ரூபாய் வழங்கும் விழா, சென்னையில் நடந்தது.உத்தரகாண்டில் 38வது தேசிய விளையாட்டு போட்டி, கடந்த மாதம் துவங்கி, இம்மாதம் 14ம் தேதி நிறைவடைந்தது. அதில், தமிழகம் உட்பட 37 அணிகள் பங்கேற்றன. தமிழகத்தை சேர்ந்த, 158 வீரர் - வீரங்கனையர் பங்கேற்றனர். இதில், 92 வீரர் - வீராங்கனையர் பதக்கம் வென்று அசத்தினர். அவர்களை கவுரவிக்கும் வகையில், உயரிய ஊக்கத்தொகையாக, 4.35 கோடி ரூபாயை தமிழக அரசு வழங்கியது. இதற்கான விழா, நேற்று சென்னை, பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில் நடந்தது. பதக்கம் வென்ற வீரர் - வீராங்கனையருக்கு, தமிழகத் துணை முதல்வர் உதயநிதி, அவர்கள் பெற்ற பதக்கத்திற்கேற்ப ஊக்கத்தொகையை வழங்கினார்.