சென்னை: சமூக வலைதளங்களில் பிரபலமாகும் நோக்கில், முறையான பயிற்சி எதுவும் இல்லாமல், இளைஞர்கள் பாம்பு உள்ளிட்ட வன உயிரினங்களுடன், ஆபத்தான முறையில், 'வீடியோ' பதிவிடுவது அதிகரித்து வருகிறது. இதை வனத்துறையினர் கண்டு கொள்ளாமல் இருப்பது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழக வன உயிரின பாதுகாப்பு சட்டம், வன உயிரினங்களை பாதுகாக்கவும், அவற்றுக்கு ஏற்படும் துன்புறுத்தல்களை தடுக்கவும் உருவாக்கப்பட்டது. இச்சட்டத்தின் கீழ், மனிதர்கள் வன உயிரினங்களை வேட்டையாடுவது, காயப்படுத்துவது மற்றும் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துவது, சட்ட விரோதமாகும். இச்சட்டத்தின் கீழ், கைது செய்யப்படும் நபருக்கு, மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை, சிறை தண்டனை வழங்கப்படுகிறது. எனினும், மனிதர்களால் வன உயிரினங்கள் தாக்கப்படும் சம்பவம், தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் பிரபலமாகும் நோக்கில், இளைஞர்கள் சிலர் முறையான பயிற்சி இல்லாமல், பாம்பு, குரங்கு உள்ளிட்ட வன உயிரினங்களுடன், ஆபத்தான முறையில் விளையாடுவதும், அவற்றை துன்புறுத்தி வீடியோ பதிவிடுவதும், சமீப காலமாக அதிகரித்து உள்ளன. சமீபத்தில், இன்ஸ்டாகிராமில் இளைஞர் ஒருவர், 6 அடி நீளமுள்ள விஷ பாம்பை கைகளால் பிடித்து சுற்றிவரும் வீடியோ, வேகமாக பரவியது. இத்தகைய செயல், மிகவும் ஆபத்தானதாகும். இது போன்ற நபர்கள் மீது, தமிழக வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மவுனமாக இருப்பது, வன உயிரின ஆர்வலர்கள் இடையே, கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரு மாதத்திற்கு முன், மாமல்லபுரத்தில் ஒருவர் திமிங்கல எலும்புடன், 'வீடியோ' பதிவிட்டிருந்தார். அதற்கும் வனத்துறை அதிகாரிகள், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது போன்ற வீடியோக்களை பார்ப்போரும், ஆபத்தை உணராமல், வன உயிரினங்களை சட்டவிரோதமாக பிடித்து, துன்புறுத்த வாய்ப்புள்ளது. இதுகுறித்து, வன உயிரின ஆர்வலர்கள் கூறியதாவது: பிரபலமாக வேண்டும் என்ற எண்ணத்தில், தமிழக இளைஞர்கள், வன உயிரினங்களுடன் வீடியோ எடுத்து வெளியிடுகின்றனர். இதை தடுக்காததால், மாநிலத்தில் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் செயலாக்கம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, இத்தகைய செயல்களை உடனடியாக கட்டுப்படுத்த, வனத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.