| ADDED : பிப் 20, 2024 01:31 AM
சென்னை:பத்திரப்பதிவு முடிந்த மறுநாளே, அந்த சொத்து தொடர்பான வில்லங்க விபரங்களை, இலவசமாக பார்க்கும் வகையில், புதிய வசதி துவக்கப்பட்டது. தமிழகத்தில் சொத்துக்களின் வில்லங்க விபரங்களை, பொது மக்கள் கட்டணமின்றி இணையதளம் வாயிலாக பார்க்கும் வசதி நடைமுறையில் உள்ளது. இதில், சொத்து தொடர்பான பத்திரப்பதிவு முடிந்த சில நாட்கள் கழித்து, அதன் உரிமையாளர்கள் ஆன்லைன் முறையில் வில்லங்க விபரங்களை அறியலாம். இந்நிலையில், பத்திரப்பதிவு முடிந்த மறுநாளே, வில்லங்க விபரங்களை சொத்தின் உரிமையாளர், இணையதளத்தில் பார்ப்பதற்கான புதிய வசதி உருவாக்கப்பட்டுள்ளது.இதன்படி, பத்திரப்பதிவு செய்தவரின் மொபைல் போனுக்கு, எஸ்.எம்.எஸ். வாயிலாக ஒரு இணையதள இணைப்புக்கான குறியீடு அனுப்பப்படும். அதன் வழியே சென்றால், தங்கள் சொத்து தொடர்பான பத்திரப்பதிவு விபரம் வில்லங்க சான்றிதழில் எவ்வாறு இடம் பெற்றுள்ளது என்பதை உரிமையாளர்கள் பார்க்கலாம். சென்னை பெரியமேடு சார் - பதிவாளர் அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி இத்திட்டத்தை துவக்கி வைத்தார். இதில் பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலா சாமி, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.