தமிழகத்தில் அரசியல் தொடர்புடைய பிரமுகர்கள் எட்டு பேர், ஒரே மாதத்தில் கொலை செய்யப்பட்டு உள்ளனர். சமூக விரோத செயல்களை எதிர்ப்பவர்களோ அல்லது அச்செயல்களில் ஈடுபடுபவர்களோ தம்மைக் காப்பாற்றிக் கொள்ள கடைசி புகலிடமாகக் கருதப்படும் அரசியல் வாழ்வும், பாதுகாப்பு அளிக்காத பரிதாப நிலையையே இது காட்டுகிறது. 1 கடந்த 3ம் தேதி, சேலம் மாவட்டம், தாதகாப்பட்டி காமராஜர் நகரைச் சேர்ந்த சண்முகம், 62, கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். அ.தி.மு.க.,வில், கொண்டலாம்பட்டி பகுதி செயலராக இருந்தார்.ஒரு நம்பர் லாட்டரி மற்றும் கஞ்சா விற்பனைக்கு எதிராக செயல்பட்டதால், தி.மு.க.,வைச் சேர்ந்த சேலம் மாநகராட்சியின், 55வது வார்டு கவுன்சிலர் தனலட்சுமியின் கணவர் சதீஷ்குமார் உள்ளிட்டோரால் சண்முகம் கொல்லப்பட்டதாக, போலீசில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.2 இந்த கொலைக்கான ரத்தம் காய்வதற்குள், அடுத்த நாள், மயிலாடுதுறை மாவட்டம், நடராஜபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ராஜேஷ், 26, இரவு நேரத்தில் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். தப்பித்து ஓடக்கூட முடியாத மாற்றுத்திறனாளியான இவர் கொல்லப்பட்டது சோகத்தை ஏற்படுத்தியது.3 இக்கொலைகளால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், 5ம் தேதி, சென்னை பெரம்பூரில், புதிதாக கட்டப்படும் வீட்டருகே, இரவு 7:00 மணியளவில், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், 52, கும்பலால் கொடூரமாக கொல்லப்பட்டார். ஆற்காடு சுரேஷ் என்ற ரவுடி கொலைக்கு பழிக்கு பழியாக ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டாலும், பின்னணி சதி வலையில், அரசியல் தாதாக்களின் தொடர்புகள் வெளிச்சத்திற்கு வருகின்றன.களங்கத்தை போக்க வேண்டிய கட்டாயம் நேர்ந்ததும், போலீஸ் துறையில் பெரிய மாற்றம், புதிய அதிகாரிகள் பொறுப்பேற்பு என, சில நடவடிக்கைகள் அரங்கேறின. ரவுடிகளுக்கு எதிரான வேட்டையில், ரவுடி திருவேங்கடத்தை சுட்டுக் கொன்றது போலீஸ். இது தொடரும் என்றும், கூலிப்படையின் கொட்டம் அடக்கப்படும்; அரசியல் கொலைகள் தடுக்கப்படும் என்றும் பெரிதும் பேசப்பட்டது.அதற்கு உரம் ஊட்டும் விதமாக, டூட்டி நேரத்தில், எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி.,க்கள் கைத்துப்பாக்கியுடன் இருக்க வேண்டும் என, சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் பிறப்பித்த உத்தரவும், ரவுடிகளுக்கு பயத்தை தரும் என நம்பப்பட்டது.4 அதையெல்லாம் பொய்யாக்கும் வகையில், அடுத்த ஓரிரு நாளில், 8ம் தேதி, இட பிரச்னை காரணமாக, திருச்சி மாவட்டம், ஜெம்புநாதபுரத்தில் தி.மு.க., கிளைச் செயலர் ரமேஷ், 55, என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.5 ஒரு வார இடைவெளிக்கு பின், 16ம் தேதி அதிகாலையில், மதுரை தல்லாகுளம் வல்லபபாய் சாலையில், அமைச்சர் தியாராஜன் வீட்டருகே நடை பயிற்சி சென்ற, நாம் தமிழர் கட்சியின் வடக்கு தொகுதி துணைச் செயலர் பாலசுப்ரமணியன், 50, மர்ம நபர்களால் கொல்லப்பட்டார்.இப்படி தொடர் கொலைகள் அரங்கேறும் சூழலில், எதிர்க்கட்சிகள் எல்லாம் அரசுக்கும், காவல் துறைக்கும் எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பத் துவங்கின. ஆனாலும், அரசியல் கொலைகள் தொடர்கின்றன. 6 நேற்று முன்தினம் கடலுார் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூர் நவீதம் நகரைச் சேர்ந்த பத்மநாபன், 25, அதிகாலையில் காரில் வந்த கும்பலால் கொல்லப்பட்டார். இவர் கடலுார், 25வது வார்டு அ.தி.மு.க., அவைத் தலைவராக இருந்தார்.7 அதேபோல, சிவகங்கை அருகே, வேலாங்குளத்தில் செங்கல் சூளை நடத்தி வந்த செல்வகுமார், 52, சாத்தரசன்கோட்டை பிரதான சாலையில் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இவர், பா.ஜ.,வில் கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலராக பதவி வகித்து வந்தார்.8 இந்த கொலைகளால் ஏற்பட்ட பதற்றம் அடங்குவதற்குள், கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு அருகே, முவாற்றுமுகம் குன்னத்துவிளையைச் சேர்ந்த ஜாக்சன், 35, ஆறு பேர் கொண்ட கும்பலால் கொல்லப்பட்டார். இவர், திருவட்டார் நகர இளைஞர் காங்., முன்னாள் தலைவராக இருந்தார்.கொலையாளிகளை கைது செய்யக்கோரி திருவட்டார் - பேச்சிப் பாறை சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்ட காங்., - எம்.எல்.ஏ.,க்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ், தாரகை கத்பர்ட் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இப்படி தமிழகத்தில், ஒரே மாதத்தில் அரசியல்கட்சிகளைச் சேர்ந்த எட்டு பேர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர். 'இருநுாறு நாட்களில், 595 கொலைகள் அரங்கேறி உள்ளன' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி கூறியுள்ளது, கடும் மிரட்சியை ஏற்படுத்தினாலும், அது உண்மை தான் என நிரூபிக்கும் வகையில், நாளுக்கு நாள் கொலைக் கொடூரங்கள் அரங்கேறி வருகின்றன.பெரும்பாலான கொலைகள் முன்விரோதத்தால் நடத்தப்படுபவை என்று அமைச்சர் ரகுபதி கூறுவதைப் பார்க்கும்போது, யாருக்கும் தென்படாமல் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் ரவுடிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு கட்டமைப்பில் இருந்த அச்சம் முற்றிலும் நீங்கி, போலீசாரையே தாக்கும் அளவுக்கு, ரவுடிகள் வீரியம் அடைந்து விட்டனரோ என்ற சந்தேகம் எழுகிறது.'இப்படிப்பட்ட தைரியம் ஏற்படக் காரணம், முன் விரோதக் கொலைகளுக்குப் பின்னணியில், சட்ட விரோத நடவடிக்கைகளும், அதன் மூலமான தாராள பணப் பரிமாற்றமும் தான் என்பதை மறுப்பதற்கில்லை' என்கிறார், காவல் துறை ஓய்வு பெற்ற அதிகாரி. 'சட்டம் --- ஒழுங்கு சீரழிவில் தமிழகம் முதலிடம்'
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை:'கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு மற்றும் அதை தொடர்ந்து நடந்த மர்ம மரணங்கள் குறித்த வழக்குகள், 90 நாட்களில் முடிக்கப்படும்' என, முதல்வர் தேர்தல் பிரசாரத்தின்போது, வாக்குறுதி அளித்தார்.ஆட்சி பொறுப்பேற்று, 1,190 நாட்கள் முடிந்த நிலையில், 'மெகா சீரியல்' தொடர்போல் நீண்டு கொண்டே செல்கிறது. பல வழக்குகளில் இந்த நிலைமைதான் நீடிக்கிறது.அன்றாடம் கொலைகள், கொலை வெறி தாக்குதல்கள் நடந்து வருகின்றன. அரசு ஊழியர்களை மிரட்டுவது, காவல் துறையினரை, பொது மக்களை மிரட்டுவது என, தி.மு.க.,வினர் வன்முறையில் ஈடுபடுவதும், பல சமூக விரோத செயல்களுக்கு, அவர்கள் உடந்தையாக இருப்பதும்தான், குற்ற நிகழ்வுகள் அதிகரிக்க காரணம்.இதை கட்டுப்படுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் முதல்வருக்கு உண்டு. இதுகுறித்து துளியும் கவலைப்படாமல், சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக, தனக்கு தானே தம்பட்டம் அடித்து கொண்டிருக்கிறார். முதல்வரின் இதுபோன்ற செயல்பாட்டால், பொது மக்கள் உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.சட்டம் - ஒழுங்கு சீரழிவில், இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இந்த நிலை நீடித்தால், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி குன்றி, பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.எனவே, கொலை குற்றங்களில் ஈடுபடுவோர் மீது, பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுத் தர வேண்டும். காவல் துறையினரை கண்டு ரவுடிகள் அஞ்சும் நிலையை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.ஹெல்மெட் அபராதத்தில் போலீசார் முழு கவனம்
தமிழக காங்கிரஸ் பொதுச்செயலர் கே.ஜி.ரமேஷ்குமார் அறிக்கை:ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையானவர்கள் தமிழக போலீசார். சமீப காலமாக, அவர்களின் முழு கவனமும், ெஹல்மெட் இல்லாமல் வரும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிப்பதில் மட்டுமே உள்ளது. இரவில் குடிமகன்களின் வாகனத்தை சோதனை செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். உயர் அதிகாரிகள், 'ெஹல்மெட்' வசூலுக்கு விதித்துள்ள இலக்குதான் இதற்கு காரணம். இதனால், சட்டம் ஒழுங்கு போலீசாரின் ரெகுலர் பணிகள் பாதிக்கின்றன.ரவுடிகளை தேடி பிடித்து, குற்றங்கள் நடக்காமல் தடுக்க, ரோந்து பணிகள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. தமிழகத்தை அமைதி பூங்காவாக தொடரச் செய்யும் முனைப்பில் ஆர்வம் காட்ட முடியவில்லை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.தி.மு.க., அரசு பதவி விலகணும்
கடலுார் நகர அ.தி.மு.க., வட்டச் செயலர் பத்மநாபன், சிவங்கை மாவட்ட பா.ஜ., நிர்வாகி செல்வகுமார், கன்னியாகுமரி காங்கிரஸ் நிர்வாகி உஷா ராணியின் கணவர் ஜாக்சன் ஆகிய மூவரும், ஒரே நாளில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் சட்டம் -- -ஒழுங்கு முழுமையாக தோல்வியடைந்து விட்டது என்பதையே, இந்த அரசியல் படுகொலைகள் காட்டுகின்றன.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தலையாய கடமை, சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பது தான். இனியாவது காவல் துறையை தட்டி எழுப்பி, சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். அதை செய்ய முடியாவிட்டால், கடந்த இரு மாதங்களில் நடந்த அரசியல் படுகொலைகளுக்கு பொறுப்பேற்று, தமிழக அரசு பதவி விலக வேண்டும்.அன்புமணிபா.ம.க., தலைவர் பா.ஜ., நிர்வாகி கொலையில் சிக்கியவர் மீது துப்பாக்கி சூடு
சிவகங்கை, வேலாங்குளத்தை சேர்ந்த பா.ஜ., கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலர் செல்வகுமார், 52, கடந்த 2ம் தேதி இரவு வெட்டிக் கொல்லப்பட்டார். தனிப்படை போலீசார் விசாரித்து, மேலப்பிடாவூர் மருதுபாண்டி, 20, சாத்தரசன்கோட்டை அருண்குமார், 20, வைரம்பட்டி வசந்தகுமார், 25, புதுப்பட்டி சதீஷ், 21, எம்.ஜி.ஆர்., காலனி விஷால், 20, ஆகியோரை கைது செய்தனர்.கடந்த 2019ல் மேலப்பிடாவூர் புவனேஸ்வரன் கொலை செய்யப்பட்டார். பழிக்குப்பழியாக இந்த சம்பவம் நடந்தது தெரியவந்தது. கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை, புதுப்பட்டியில் பதுக்கி வைத்திருப்பதாக வசந்தகுமார் கூறியுள்ளார். நேற்று மாலை, 6:30 மணிக்கு புதுப்பட்டி கிராமத்திற்கு அவரை, போலீசார் அழைத்துச் சென்றனர்.கோவில் அருகே மறைத்து வைத்திருந்த வாளை எடுத்த வசந்தகுமார், அருகில் நின்ற தாலுகா எஸ்.ஐ., பிரதாப்பை தாக்கி தப்ப முயன்றார். இதில், எஸ்.ஐ.,க்கு இடது கையில் வெட்டு விழுந்தது. வசந்தகுமாரை இன்ஸ்பெக்டர் மணிகண்டன், துப்பாக்கியால் காலில் சுட்டு, பிடித்தார்.இருவரும் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வசந்தகுமார், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். - நமது நிருபர் -