| ADDED : ஜன 11, 2024 09:22 PM
ஜனவரி 12, 1895 தற்போதைய ஆந்திர மாநிலத்தின், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமாவரத்தில், 1895ல் இதே நாளில் பிறந்தவர் எல்லப்பிரகத சுப்பாராவ்.ஏழை குடும்பத்தில் பிறந்த இவர், சென்னை ஹிந்து உயர்நிலைப் பள்ளி, மாநிலக் கல்லுாரி, மருத்துவக் கல்லுாரிகளில் படித்தார். காந்தியின் கதர் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு கதர் அணிந்தார்.இதனால், ஆத்திரமுற்ற அறுவை சிகிச்சை பேராசிரியர் பிராட் பீல்ட், இவருக்கு எம்.பி.பி.எஸ்., பட்டத்துக்கு குறைவான எல்.எம்.எஸ்., பட்டம் வழங்கினார். ஆயுர்வேத கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றி, பலரின் உதவியால் அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவ ஆய்வு நிறுவனத்தில் சேர்ந்தார்.அதில் பணியாற்ற அனுமதி கிடைக்காததால், பிரிகாம் பெண்கள் மருத்துவமனையில் அடிப்படை பணிகளை செய்தார். அங்கு, தொடர்ந்து ஆய்வுகளில் ஈடுபட்டு, ரத்த பாஸ்பரஸ் அளவை மதிப்பிடும் முறை, புற்றுநோய்க்கு எதிரான, 'மீதோட்ரெக்சேட்' மருந்து உள்ளிட்டவற்றை கண்டறிந்தார். 1948, ஆகஸ்ட் 9ல் தன், 53வது வயதில் மாரடைப்பால் மறைந்தார். இவரது பிறந்த தினம் இன்று!