திருச்சி:''இந்தியாவில், 2,000 விமானங்கள் பறக்கும் நிலை விரைவில் வரும்,'' என, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பேசினார்.திருச்சி விமான நிலைய புதிய முனையம் திறப்பு விழாவில், அவர் பேசியதாவது:இந்தியாவில், திருச்சி போல எந்த நகரமும் புகழ் பெற்றது இல்லை. திருச்சி மாநகரம், சிறந்த அறிஞர்கள், தலைவர்கள், கல்வியாளர்களை தமிழகத்துக்கு மட்டுமல்ல, உலகிற்கே கொடுத்துள்ளது. விமான நிலையம் என்பது பயணிக்கும் இடமாக இல்லாமல், வளர்ச்சிக்கான, வேலை வாய்ப்புக்கான மையமாகவும் உள்ளது. வணிகம், சுற்றுலா, தொழில்துறை, கல்வி, மருத்துவம் ஆகியவற்றுக்கு முக்கிய மையமாக திருச்சி வருங்காலத்தில் விளங்கும். இந்தியாவில் அனைத்து விமான நிலையங்களும், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பசுமை விமான நிலையங்களாக விரைவில் மாறும்; 2014ம் ஆண்டை விட, தற்போது, 23 சதவீதம் அதிக விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன.தமிழகத்தில் தற்போது, ஐந்து விமான நிலையங்கள் உள்ளன. விரைவில், நெய்வேலி, வேலுார் விமான நிலையங்கள் செயல்பாட்டிற்கு வரும். கடந்த, 65 ஆண்டுகளில், 74 விமான நிலையங்கள் மட்டுமே உருவாக்கப்பட்டன. ஆனால், 10 ஆண்டுகளில் மட்டும், 75 விமான நிலையங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டு உள்ளன. தற்போது, 700 விமானங்கள் உள்ளன. அவை விரைவில், 2,000 விமானங்களாக மாறும். உலகளவில் பொருளாதாரத்திலும், விமான போக்குவரத்திலும், ஐந்தாம் இடத்தில் உள்ள இந்தியா, விரைவில், மூன்றாம் இடத்துக்கு வரும்.இவ்வாறு சிந்தியா பேசினார்.