காங்கேயத்தில் இரு பைக்குகள் மோதி விபத்து: 2 சிறுவர்கள் உட்பட மூவர் பலி
திருப்பூர்: காங்கேயம் அருகே இரு பைக்குகள் மோதிய விபத்தில் 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் வசித்து வருபவர் கலைவாணி, 46. கணவர் உயிரிழந்த நிலையில் தனது மகன்கள் மைத்ரேயன், 20, சரண், 13 ஆகியோருடன் வசித்து வருகிறார். மூவரும் நேற்று முன்தினம் இரவு காங்கேயத்தில் இருந்து சென்னிமலை செல்ல நால்ரோடு, பரஞ்சேர்வழி கரிய காளியம்மன் கோயில் வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது, அப்பகுதியில் தனியார் கிரஸரில் வேலை பார்த்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி துகிராம் தாஸ், 27, மற்றும் அவரது இரு நண்பர்கள், மூவரும் வந்த பைக், கலைவாணியின் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஆறு பேருக்கும் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், சிறுவர்கள் மைத்ரேயன், சரண், வடமாநில தொழிலாளி துகிராம் தாஸும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், சிறுவர்களின் தாயார் கலைவாணியை மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காங்கேயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.