கே.சி.பழனிசாமி கூறும் நரி அ.தி.மு.க.,வில் புது சர்ச்சை
சென்னை: 'அ.தி.மு.க.,வை சீர்குலைத்து வரும் தந்திரமான நரி எப்போது அம்பலமாகும்' என, அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட, முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். அவரது அறிக்கை: அ.தி.மு.க.,வை சீர் குலைத்து வரும் தந்திரமான நரி எப்போது அம்பலமாகும். அ.தி.மு.க.,வில் ஒரு ஜாதி வெறி பிடித்த நரி உள்ளது. ஜெயலலிதா காலத்தில், 'ஜாதி வெறியன்' என, முத்திரை குத்தப்பட்டு, அமைச்சரவை மற்றும் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டு, ஓரம் கட்டப்பட்டது. அந்த நரி ஜெயலலிதா இருக்கிற வரை, முகவரி இல்லாமல் இருந்தது. அவரது மறைவுக்கு பின், பன்னீர்செல்வத்தை முதல்வராக்குகிறேன், கட்சி தலைவராக்குகிறேன் எனக்கூறி, அவரை முன்னிறுத்தி முதல் பிளவை உருவாக்கியது அந்த நரிதான். அதன் வாயிலாக தன்னை இரண்டாம் இடத்திற்கு, உயர்த்திக் கொண்டது. கட்சி ஒன்றிணைய முயற்சி எடுத்தபோது, அந்த நரி முட்டுக்கட்டையாக இருந்தது. ஒரு நாள் அந்த நரியை தோலுரித்த பின், சில காலம் முடங்கியது. பின்னர் அணிகள் இணைகிறபோது, தனது சித்து விளையாட்டுக்கள் வழியே, பல சீனியர்களை பின்னுக்கு தள்ளி மீண்டும் முன்னேறியது. கட்சி வலுவோடு இருக்க வேண்டும் என நினைத்த பலரையும், தனது சதி திட்டத்தால் பின்னுக்கு தள்ளியது. தற்போது பழனிசாமியை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல் ஆக்கிவிடுவேன் என உசுப்பேற்றி, செங்கோட்டையன் போன்றோரை வீழ்த்தி, கட்சியின் ஒற்றுமையை தடுத்து, வலிமையை சிதைத்துக் கொண்டிருக்கிறது. வேலுமணி, சி.வி.சண்முகம் போன்றோரை காவு வாங்க காத்துக் கொண்டிருக்கிறது. பழனிசாமிக்கு அதிகார போதை ஊட்டி, தன்வசப்படுத்தி, கட்சியை என்றுமே வெற்றி பெற முடியாத நிலைக்கு ஆளாக்கி கொண்டிருக்கிறது. பழனிசாமி அந்த நரியை இனம் கண்டு தோலுரிக்காவிட்டால், எந்த காலத்திலும், ஆட்சி கட்டிலில் அமர முடியாது. இவர் காலத்தில் கட்சி வலுவிழந்தது என்ற தீரான பழிச்சொல்லுக்கு, பழனிசாமி ஆளாக நேரிடும். விஜய் எனும் மாயமானை முன்னிறுத்தி, அ.தி.மு.க., வழியே விஜயை முதல்வராக்க, அந்த நரி முடிவு செய்துள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.