| ADDED : ஏப் 25, 2024 08:06 PM
பொள்ளாச்சி :கடும் வறட்சியால் ஆனைமலை அருகே டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமில் இருந்து வளர்ப்பு யானைகள் இடமாற்றம் செய்யப்பட்டன.ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகத்தில் கோழிகமுத்தி, வரகளியாறு யானை முகாம்களில் மொத்தம், 26 யானைகள் பயிற்சி அளிக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.யானைகளின் வயது, எடை மற்றும் செயலுக்கு தகுந்தவாறு கால்நடை டாக்டரின் பரிந்துரையின்படி உணவு வழங்கப்படுகிறது.இந்நிலையில், இந்தாண்டு போதிய மழைப்பொழிவு இல்லாததால் வனப்பகுதி முழுவதும் கடுமையான வறட்சி நிலவுகிறது. வனப்பகுதியில் உள்ள ஓடைகள், குட்டைகள் அனைத்தும் வறண்டு கிடக்கின்றன.இதனால், கோழிகமுத்தியில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு போதுமான உணவு மற்றும் குடிநீர் கிடைக்காத நிலை உள்ளது.வனத்துறை அதிகாரிகள், யானைகளை இடமாற்றம் செய்ய முடிவெடுத்தனர். அதன்படி, கோழிகமுத்தி முகாமில் இருந்து வால்பாறையை அடுத்த மானாம்பள்ளி எஸ்டேட் பகுதிக்கு ஓய்வு பெற்ற கலீம், பேபி, காவேரி உள்ளிட்ட யானைகள் இடமாற்றம் செய்யப்பட்டன. வரகளியாறு எட்டு யானைகள், சின்னாறு பகுதி உள்ளிட்ட மூன்று இடங்களுக்கு மற்ற யானைகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.ஆறு யானைகள் மட்டும் வளர்ப்பு யானைகள் முகாமில் அதே பகுதியில் பராமரிக்கப்படுகிறது.வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'யானைகள் முகாமில் உணவு, தண்ணீர் கிடைக்காத சூழலில், வறட்சி காரணமாக மாற்று இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. மேலும், யானைகளின் பாகங்களுக்கு வீடுகள் கட்டட பணிகள் நடைபெறுவதாலும் இந்த யானைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன,' என்றனர்.