உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 8.7 சதவீதம் பேருக்கு சிறுநீரக பாதிப்பு: அறிகுறி இருந்தால் பரிசோதனை அவசியம்

8.7 சதவீதம் பேருக்கு சிறுநீரக பாதிப்பு: அறிகுறி இருந்தால் பரிசோதனை அவசியம்

சென்னை: ''தமிழகத்தில், 8.7 சதவீதம் பேர் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டு இருப்பதற்கு, போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணம்,'' என, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர் கே.நாராயணசாமி கூறினார்.உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு, 'அனைவருக்குமான சிறுநீரக நலன்' என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பங்கேற்ற அவர் கூறியதாவது:தனிமனித ஆரோக்கியத்தில், அதிமுக்கிய பங்கு வகிப்பது சிறுநீரகங்கள் தான். ரத்தத்தில் உள்ள நச்சுகளையும், அதிகப்படியான நீரையும் வெளியேற்றும் பணியை செய்வதுடன், ரத்த அழுத்தத்தையும் சீராக்க உதவுகின்றன.அந்த பணிகள் தடைபட்டு, ரத்த சுத்திகரிப்பு பாதிக்கப்பட்டு, தமிழகத்தில், 8.7 சதவீதம் பேருக்கு சிறுநீரக செயலிழப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதயநாள செயலிழப்பால் ஏற்படும் மரணங்களில், 7.6 சதவீதம் சிறுநீரக பாதிப்புடன் தொடர்புடையவை.அடுத்த 15 ஆண்டுகளில், உலகம் முழுதும் தொற்றா நோய்களால் நேரிடும் இறப்புகளும், பிரதான காரணங்களில் ஒன்றாக சிறுநீரக செயலிழப்பு இருக்கும்.சிறுநீரில் புரதம் வெளியேறுதல், சிறுநீர் வெளியேறும் அளவு அதிகமாகவோ, குறைவாகவோ இருத்தல், தோல் வறட்சி, திடீரென எடை குறைதல் உள்ளிட்டவை, சிறுநீரக பாதிப்புகளுக்கான தொடக்க நிலை அறிகுறிகள்.அதேநேரம், நாள்பட்ட பாதிப்புகளுக்கு அரிப்பு, கால் வீக்கம், அடிக்கடி ஏற்படும் தசை பிடிப்பு ஆகியவை அறிகுறிகளாக இருக்கும்.சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நாள பாதிப்புகள், உடல் பருமன் உள்ளிட்டவையும் முக்கிய காரணங்களாக உள்ளன.உடலில் நீர்ச்சத்தை தக்கவைத்துக் கொள்ளுதல், புகைப்பழக்கத்தை கைவிடுதல், மது அருந்துவதை தவிர்த்தல், சரிவிகித உணவு, உடற்பயிற்சி, தேவையற்ற மருந்துகளை தவிர்த்தல் ஆகிய வழிமுறைகள் வாயிலாக சிறுநீரகங்களின் நலன் காக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி