சென்னை; அமைச்சர் சுப்பிரமணியன் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், குற்றச்சாட்டுகளை பதிவு செய்து, விசாரணையை சிறப்பு நீதிமன்றம் தொடர உத்தரவிட்டுள்ளது.சென்னை சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவர், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியனுக்கு எதிராக புகார் அளித்தார்.அதில், 'சென்னை கிண்டி தொழிலாளர் காலனியில், எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த குடியிருப்பை, சென்னை மாநகராட்சி மேயராக இருந்தபோது, போலி ஆவணங்கள் வாயிலாக, அதிகார துஷ்பிரயோகம் செய்து, சுப்பிரமணியன் தன் மனைவி காஞ்சனா பெயருக்கு மாற்றம் செய்துள்ளார்' என கூறியிருந்தார்.சுப்பிரமணியன், காஞ்சனா உள்ளிட்டோருக்கு எதிராக, மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், 2019ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும், சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், அமைச்சர் சுப்பிரமணியன், அவரது மனைவி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில், நீதிபதி பி.வேல்முருகன் நேற்று அளித்த தீர்ப்பு:அமைச்சர் சுப்பிரமணியன், மனைவி மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து, விசாரணையை சிறப்பு நீதிமன்றம் தொடரலாம். விசாரணையை துரிதப்படுத்த சிறப்பு நீதிமன்றத்துக்கு எந்தவித காலக்கெடுவும் விதிக்க முடியாது.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.