உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் துவக்கம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் துவக்கம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்

சென்னை: 'உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின்' ஆகிய திட்டங்களை, தற்போதைய பெயரிலேயே தொடர்ந்து செயல்படுத்த, அனுமதி கோரிய, தமிழக அரசின் மனு மீதான விசாரணையை, வரும் 7ம் தேதிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில், 'ஸ்டாலின்' என்ற பெயரை, தமிழக அரசு பயன்படுத்த தடை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வழக்கு தொடர்ந்தார். இதேபோல், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் குறித்த விளம்பரத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி புகைப்படத்தை பயன்படுத்த தடை விதிக்க கோரி, அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு செயலர் இனியன் வழக்கு தொடர்ந்தார். இவற்றை விசாரித்த உயர் நீதிமன்றம், 'உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, அரசு திட்டங்களில் வாழும், அரசியல் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்த அனுமதிக்க முடியாது. 'அரசு திட்ட விளம்பரங்களில், முன்னாள் முதல்வர்கள், சிந்தாந்த தலைவர்கள் புகைப்படம், கட்சி கொடி, சின்னம் பயன்படுத்தக் கூடாது' என, உத்தரவிட்டது. இதை மாற்றி அமைக்க கோரி, தமிழக அரசு தரப்பில், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி சுந்தர்மோகன் அடங்கிய அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'உயர் நீதிமன்ற இடைக்கால உத்தரவை எதிர்த்து, தி.மு.க., தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு, மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 'அந்த மனு, நாளை விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது' என, மனுதாரர் சி.வி.சண்முகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை கேட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்றத்தின் முடிவுக்கு பின், தமிழக அரசின் மனுவை விசாரணைக்கு எடுக்கலாம் எனக் கூறி, விசாரணையை ஆக.,7ம் தேதிக்கு தள்ளி வைத்தனர். இந்த நிலையில், உயர் நீதிமன்ற தடையை மீறி, நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை, அரசு துவக்கி உள்ளது எனக் கூறி, சி.வி.சண்முகம் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கும், ஆக.,7ம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை