உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெட்ரோல் விற்பனை மையங்களுக்கு உரிமம்; விதிமுறையை உறுதி செய்ய ஐகோர்ட் உத்தரவு

பெட்ரோல் விற்பனை மையங்களுக்கு உரிமம்; விதிமுறையை உறுதி செய்ய ஐகோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'பெட்ரோல் விற்பனை மையங்களுக்கு உரிமம் வழங்கும் போது, அனைத்து சட்டப்பூர்வ விதிகள் பின்பற்றப்பட்டு இருப்பதை, பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த, வழக்கறிஞர் வி.பி.ஆர்.மேனன் தாக்கல் செய்த மனு:பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான அம்சங்களை, பெட்ரோல் விற்பனை மையங்கள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். விற்பனை மையங்கள் இயங்கும் இடத்துக்கு, பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பிடம் முன் அனுமதி பெற வேண்டும்.

பொய் உத்தரவாதம்

இடம் தகுதியானது, பாதுகாப்பானது என்பது போல் பொய்யான உத்தரவாதம், ஆவணங்களை அளித்து, தடையில்லா சான்றிதழ் பெறுகின்றனர். இதனால், பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, பெட்ரோல் விற்பனை மையங்கள் அமைந்துள்ள இடங்களுக்கு தவறாக அனுமதி வழங்கியது, வெடிபொருள் உரிமம் வழங்கியது குறித்து, விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். மையங்களுக்கு இட அனுமதி மற்றும் வெடிபொருள் உரிமம் வழங்குவதற்கு முன், நேரடி ஆய்வு நடத்தி, நடைமுறைகளை சரிபார்க்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன், வழக்கறிஞர் பிரகதீஷ், தமிழக அரசு சார்பில், அரசு பிளீடர் எட்வின் பிரபாகர், பெட்ரோலிய நிறுவனங்கள் சார்பில், வழக்கறிஞர் ஆனந்த நடராஜன் ஆஜராகினர். முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:பெட்ரோல் விற்பனை மையம் அமையும் இடத்துக்கு, முன் அனுமதி பெறும் கட்டத்தில், விதிகளின்படி விசாரணை நடத்தப்பட வேண்டும். விதிகளில் கூறப்பட்டு உள்ள அம்சங்கள் பூர்த்தி செய்யப்பட்டு இருப்பதில், பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு அதிகாரிகள் திருப்தி அடைய வேண்டும். எனவே, இடத்துக்கான முன் அனுமதி வழங்கும் போது, பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பின் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, விதிகளில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதில் திருப்தி அடைய வேண்டும்.

அவசியமில்லை

அதற்காக, ஒவ்வொரு மையத்தையும் நேரில் ஆய்வு செய்ய அவசியமில்லை; எப்போதெல்லாம் சந்தேகம் எழுகிறதோ அல்லது நேரடி ஆய்வுக்கான சூழ்நிலை எழுகிறதோ, அப்போது மேற்கொள்ள வேண்டும்.தடையில்லா சான்றிதழ் வழங்கும் மாநில அரசு அதிகாரிகள், தேவையான அம்சங்கள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதில் திருப்தி அடைந்த பின், வழங்க வேண்டும். இறுதியாக உரிமம் வழங்கும் போது, அனைத்து சட்டப்பூர்வ விதிகள் பின்பற்றப்பட்டு உள்ளதா என்பதை, உறுதி செய்ய வேண்டியது, பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு அதிகாரிகளின் கடமை. இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை