உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பணி நியமனம் ஓரிடம் வேலை செய்வது வேறிடம்; சிறப்பு செயலர் உத்தரவால் உள்ளாட்சி தணிக்கைத்துறையினர் அதிருப்தி

பணி நியமனம் ஓரிடம் வேலை செய்வது வேறிடம்; சிறப்பு செயலர் உத்தரவால் உள்ளாட்சி தணிக்கைத்துறையினர் அதிருப்தி

மதுரை : பணிநியமனம் ஓரிடம்; வேலை ஓரிடம் என பணியாற்ற உத்தரவிடுவதால், நிதித்துறை சிறப்பு செயலாளர் மீது நிதித்துறையின் கீழ் செயல்படும் பல்வேறு தணிக்கை பிரிவுகளும் அதிருப்தியில் உள்ளன. இதனால் உள்ளாட்சித் தணிக்கைத் துறையினர் நாளை மறுநாள் முதல் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.தமிழக நிதித்துறையின் கீழ் கூட்டுறவு, உள்ளாட்சி, ஹிந்துசமய அறநிலையம், பால்வளம், மாநில தணிக்கை என 5 தணிக்கை பிரிவுகள் தனித்தனியாக செயல்படுகின்றன. நிதித்துறை சிறப்பு செயலாளரான அருண்சுந்தர் தயாளன் இந்த 5 பிரிவுகளுக்கும் இயக்குனராகவும் கூடுதல் பொறுப்பில் உள்ளார்.உள்ளாட்சித் தணிக்கைத் துறையில் இவரது உத்தரவுகள் அனைத்து ஊழியர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.இத்துறையினர் கூறியதாவது: உள்ளாட்சித் தணிக்கைத் துறையில் பணிநியமனம் 3 ஒன்றியங்களுக்கு பொதுவான ஒன்றில் இருக்கும். அங்கு பணி செய்வதை விடுத்து, நாங்கள் வேறு ஒன்றியங்களிலோ, வேறு மாவட்டங்களிலோ சென்று தணிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என இயக்குனர் உத்தரவிடுகிறார். இது சாத்தியமே இல்லாத ஒன்று. பணி நியமனம் செய்த பகுதிக்கு குடும்பத்தோடு சென்று வசிக்கும் ஊழியர் அங்கு 3 ஆண்டுகளுக்கு பின்பே பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.ஆனால் பணி நியமனம் ஓரிடம், பணியாற்றுவது வேறிடம் என்று உத்தரவிடுவதால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளோம். இதுகுறித்து அமைச்சர்கள், உயரதிகாரிகள் வரை புகார் தெரிவித்துள்ளோம். இருப்பினும் நிலைமை தொடர்வதால் போராட்டம் அறிவித்துள்ளோம் என்றனர்.உள்ளாட்சி நிதித் தணிக்கைதுறை, மாநில அரசு தணிக்கை துறையினர் சங்க மாநில தலைவர் மாரிமுத்து கூறுகையில், ''பணி நியமனம் செய்த மாவட்டத்திற்குள் வேறு ஒன்றியத்தில் பணியாற்றினால்கூட பரவாயில்லை. 200, 300 கி.மீ., தொலைவில் சென்று பணியாற்ற உத்தரவிடுகிறார். இதனால் நாளை மறுநாள் மாநில அளவில் கருப்புப்பட்டை அணிந்து போராட உள்ளோம். இந்நிலை தொடர்ந்தால் போராட்டமும் தொடரும். இதேபோல மற்ற பிரிவினரும் அதிருப்தியில் போராட தயாராக உள்ளனர்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை