பதவி காலம் முடிந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் தனி அதிகாரிகள் பணிகளில் தலையீடு
சென்னை:பதவி காலம் முடிந்த உள்ளாட்சி பிரதிநிதிகள், தனி அதிகாரிகளின் பணிகளில் தலையிடுவதாக புகார்கள் அதிகரித்துஉள்ளன.சென்னையில் ஊரக உள்ளாட்சி பதவிகள் இல்லை. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், திருவண்ணாமலை, திருப்பத்துார், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள் தவிர்த்து, மீதமுள்ள, 28 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி நிர்வாகிகளின் பதவிக்காலம் ஜனவரி, 5ம் தேதி முடிந்தது. இதையடுத்து, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அலுவலர்களை, ஊரக வளர்ச்சி துறை நியமனம் செய்துஉள்ளது. தனி அலுவலர்கள் கட்டுப்பாட்டில், மாவட்ட ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், ஊராட்சி அலுவலகங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், தனி அலுவலர்களின் பணிகளில், பதவி காலம் முடிந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் தலையிட்டு வருகின்றனர்.புதிய மனை பிரிவுகளுக்கு ஒப்புதல் வழங்குதல், கட்டுமான பணிகளுக்கு அனுமதி வழங்குதல் உள்ளிட்ட பணிகளில், தங்கள் பரிந்துரை இல்லாமல் எதையும் செய்யக்கூடாது என, சிலர் நிர்ப்பந்தம் செய்கின்றனர். சாலை, குடிநீர், தெருவிளக்கு பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கான ஒப்பந்ததாரர்கள் தேர்விலும் தலையிடுகின்றனர். இதனால், பணிகளை முறையாக செய்ய முடியாமல், தனி அலுவலர்கள் பலர் தவித்து வருகின்றனர். பல ஊராட்சிகளில் தெருவிளக்கு பராமரிப்பு, குடிநீர் வினியோகம் உள்ளிட்ட பணிகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பயந்து, பணிக்கு வருவதற்கு ஊராட்சி செயலர்கள் அஞ்சும் நிலையும் உள்ளது.காலை, 11:00 மணிக்கு வந்து, ஒரு மணி நேரத்தில் ஊராட்சி செயலர்கள் ஓட்டம் பிடித்து விடுகின்றனர். முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகளின் தலையீடு குறித்து, ஊரக வளர்ச்சி துறை உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்ற வண்ணம் உள்ளன.