நீளமான சொகுசு பஸ்கள் 20 பொங்கலுக்குள் இயக்க முடிவு
சென்னை:அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில், முதல் முறையாக, 20 'வால்வோ மல்டி ஆக்சில்' சொகுசு பஸ்கள் பொங்கலுக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளன. இதுகுறித்து, அரசு விரைவு போக்கு வரத்து கழகமான, எஸ்.இ.டி.சி., அதிகாரிகள் கூறியதாவது: விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், 1,080க்கும் மேற்பட்ட, 'டீலக்ஸ்' மற்றும், 'ஏசி' பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். முதல் முறையாக, 20 'வால்வோ மல்டி ஆக்சில்' சொகுசு பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளோம். ஒவ்வொரு பஸ்சும், 1.15 கோடி ரூபாய்க்கு வாங்கப்படுகிறது; 15 மீட்டர் நீளம் உடையது. இதற்கான கொள்முதல் ஆணை, வால்வோ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. வழக்கமான பஸ்சை விட பெரியதாக இருக்கும். ஒரே நேரத்தில், 51 பேர் பயணம் செய்ய முடியும்; அதிர்வுகள் இல்லாமல் பயணிக்கலாம். சொகுசு இருக்கைகள், 'ஏசி' வசதி, மொபைல் போன் 'சார்ஜிங்' வசதி, 'வைபை' உள்ளிட்ட வசதிகள் இருக்கும். அதிகபட்சமாக மணிக்கு, 120 கி.மீ., வேகம் செல்லும் திறன் உடையது. இந்த சொகுசு பஸ்கள், வரும் பொங்கலுக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.