உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை இளைஞரை பூனை கடித்ததால் ரேபிஸ் தாக்கியது

மதுரை இளைஞரை பூனை கடித்ததால் ரேபிஸ் தாக்கியது

மதுரை : மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த பாலமுருகன், 25 பூனை கடித்த நிலையில் சிகிச்சை பெறாததால் ரேபிஸ் நோய் பாதிப்புக்குள்ளாகி மதுரை அரசு மருத்துவமனை நாய்க்கடி வார்டிலுள்ள தனியறையில் சிகிச்சை பெற்ற நிலையில் படுக்கை விரிப்பால் துாக்கிட்டு இறந்தார்.அவனியாபுரம் மருதுபாண்டியர் தெருவைச் சேர்ந்த ஆனந்தனின் மூத்த மகன் பாலமுருகன் டிகிரி முடித்து சுயமாக வேலை செய்து வந்தார்.மூன்று மாதங்களுக்கு முன் வீட்டின் மாடியில் துாங்கிய போது இரு பூனைகள் சண்டையிட்டுள்ளன.பாலமுருகன் பதறி எழுந்து விலக்க சென்ற போது ஒரு பூனை அவரது தொடையில் கடித்தது. இதில் காயம் ஏற்பட்டதால் டி.டி. தடுப்பூசி மட்டும் செலுத்தி கொண்டுள்ளார்.கடந்த வாரம் தொடர் தலைவலியால் பாதிக்கப்பட்ட பாலமுருகன் 3 நாட்களுக்கு முன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பரிசோதனையில் ரேபிஸ் பாதிப்பாக இருக்கலாம் என மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு நாய்க்கடி வார்டில் அனுமதித்த போது கூச்சலிட்டபடி தப்பியோடினார். மீண்டும் இரவு 11:30 மணிக்கு அழைத்து வரப்பட்டு தனியறையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அறையில் அதிகாலை 2:30 மணிக்கு இரும்புக்கதவின் கம்பியில் படுக்கை விரிப்பை இணைத்து துாக்கிட்டு இறந்தார்.

எந்த விலங்கு கடித்தாலும் தடுப்பூசி

ரேபிஸ் நோயின் தாக்கம் குறித்து டாக்டர்கள் கூறியதாவது: நாய், பூனை, குரங்கு, அணில், குதிரை, கழுதை என எந்த விலங்கு கடித்தாலும் ஏ.ஆர்.வி. எனப்படும் ரேபிஸ் வைரஸ் தடுப்பூசி போட வேண்டும். இது வெறிநாய் கடிக்கு மட்டும் சொல்வதில்லை. டி.டி.,யுடன் சேர்த்து முதல்நாள் தடுப்பூசி போட வேண்டும். அடுத்தது 3 ம் நாள், 7, 28 வது நாளில் தடுப்பூசி போடுவது அவசியம். முதல்நாளிலேயே தடுப்பூசி அட்டை வழங்கப்படும்.மதுரை அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்திலும் ரேபிஸ் நோய் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது.முதல்நாள் தடுப்பூசி போட்டபின் மருத்துவமனை பணியாளர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டு அடுத்தடுத்த தடுப்பூசி நாட்களை நினைவுபடுத்தி அழைக்கின்றனர். ஒரு சிலர் அலட்சியமாக விட்டு விடுகின்றனர். சிலர் வெளியூருக்கு செல்வதால் தடுப்பூசி போட முடிவதில்லை என்கின்றனர். எந்த ஊருக்கு சென்றாலும் அந்த அட்டையுடன் சென்றால் இலவசமாக தடுப்பூசி போடலாம். 4 டோஸ் தடுப்பூசி போட்டால் தான் உயிருக்கு பாதுகாப்பு.ரேபிஸ் வந்த பின் காப்பாற்றுவது இயலாது. ரேபிஸ் தாக்கி இறந்தால் நோய்த்தொற்று பரவும் என்பதால் பிரேத பரிசோதனை செய்வதில்லை. ஆனால் மருத்துவமனை வார்டில் பாலமுருகன் தற்கொலை செய்ததால் வழக்கு பதியப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
ஏப் 27, 2025 15:25

எத்துணை மருத்துவமனையில் இந்த மருந்தினை இருப்பு வைத்துள்ளார்கள்? கேடுகெட்ட அரசுகள் நோயாளிகளை அலைக்கழிப்பதில் இன்று ஒரு உயிர் பலி அதற்க்கு பெயர் தற்கொலை ?? விடிஞ்சுடும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை