ராமேஸ்வரம்: மகாளய அமாவாசையை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஏராளமானோர் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் கோவில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். மகாளய அமாவாசையில் பூஜை செய்து நீராடினால், முன்னோர் ஆன்மா சாந்தி அடையும் என்பது ஐதீகம். இன்று புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். கோயில் அக்னி தீர்த்த கரையில் முன்னோர்களுக்கு பூஜை செய்து, கடலில் நீராடினர். கோவிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடினர். இதனையடுத்து சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.நொய்யல் படித்துறை
பேரூர் நொய்யல் படித்துறையில் மகாளய அமாவாசை வழிபாடு அக் 4 நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திதி கொடுத்தனர். இறந்துபோன மூதாதையர்களை நினைத்து காய்கறிகள், அரிசி, எள், பழம், சமையல் பொருட்களை வைத்து திதி கொடுத்து தர்ப்பண வழிபாடு நடத்தினர். பின், ஆற்றங்கரை விநாயகர் கோவில், சப்தகன்னிமார் கோவில்களில் வழிபட்டனர். இறுதியாக, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் நெய்தீபமேற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். பேரூர் சுற்றுவட்டார பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றதால், படித்துறையில் கூட்டம் நிரம்பி வழிந்தது.காவிரிக்கரையில் வழிபாடு
நாமக்கல் மாவட்டம், மோகனூர் காவிரி ஆற்றில், மகாளய அமாவாசை முன்னிட்டு தங்கள் முன்னோர்களுக்கு, பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். இதே போன்று, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், வேதாரண்யம், ஈரோடு கொடுமுடி, பவானி கூடுதுறை ஆகிய இடங்களிலும், கோயில்களிலும் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர்.