காவல் கட்டுப்பாட்டு அறைக்கு குண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
சென்னை : காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெட்ரோல் பங்க் ஊழியர் கைது செய்யப்பட்டார்.சென்னை எழும்பூரில், பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில், அதிநவீன தொழில் நுட்ப வசதிகளுடன், மாநில காவல் கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது.தமிழகத்தில் எந்த இடத்தில் இருந்தும், அவசர போலீஸ் எண் 100ஐ தொடர்பு கொண்டாலும், இந்த கட்டுப்பாட்டு அறையில் இருந்து தான் அழைப்புகள் ஏற்கப்படும்.அந்த வகையில், கடந்த 20ம் தேதி இரவு 11:00 மணிக்கு ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். அவர், மாநில காவல் கட்டுப்பாட்டு அறையில், வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்து தொடர்பை துண்டித்துள்ளார். தகவல் அறிந்த எழும்பூர் காவல் நிலைய போலீசார், மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் உதவியுடன், காவல் கட்டுப்பாட்டு அறை முழுதும் சோதனை நடத்தினர். அங்கு, மர்ம பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. சோதனை முடிவில், அது வெற்று மிரட்டல் என்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து, மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரித்தனர்.விசாரணையில், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த ஜல்லிபட்டியைச் சேர்ந்த லிங்கபூபதி, 20, மிரட்டல் விடுத்ததும், 'பெட்ரோல் பங்க்' ஒன்றில் வேலை செய்வதும் தெரிய வந்தது. எழும்பூர் போலீசார் அங்கு சென்று, லிங்கபூபதியை பிடித்து விசாரித்தனர்.அவர், 10ம் வகுப்பு படித்து இருப்பதும், இதுவரை எந்த குற்றச் செயல்களிலும் ஈடுபட்டவரில்லை என்பதும், முதல் முறையாக அவசர போலீஸ் எண் 100ஐ தொடர்பு கொண்டு, வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. அவரை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.