கோவையில் டிரெக்கிங் சென்று திரும்பியவர் உயிரிழப்பு
பொள்ளாச்சி: கோவை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதிக்கு டிரெக்கிங் சென்று திரும்பியவர் உயிரிழந்தார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர்கள் பாடில்தையிப்ராஜ், 27, அஜ்சால்செயின், 26. இவர்கள், ஆன்லைன் வாயிலாக, கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்டு, அனுமதிப்பட்ட வனப்பகுதியில் டிரெக்கிங் செல்ல அனுமதி வாங்கினர். இதையடுத்து, இன்று டிரெக்கிங் வழித்தடத்தில் இரு பயிற்சி பெற்ற வழிகாட்டிகளுடன் டாப்சிலிப், ஆனகரி, சோலா, பண்டாரா வனப்பகுதி வரை சென்றனர். பின்னர், மீண்டும் மாலை, 4.30 மணிக்கு டாப்சிலிப் திரும்பினர். அப்போது, அஜ்சால்செயினுக்கு, நீரிழிப்பு(டிஹைட்ரேஷன்) ஏற்பட்டது. இதையடுத்து, வனத்துறைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் வாயிலாக அவர், ஆனைமலை அடுத்த வேட்டைக்காரன்புதுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, அவரது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனைமலை போலீசார் விசாரிக்கின்றனர்.