ஆன்லைனில் தங்க வியாபாரம் ரூ. 13 லட்சத்தை இழந்த நபர்
கோவை: கோவை, ஒண்டிப்புதுாரை சேர்ந்தவர் ஸ்ரீநிதிஷ், 36; தனியார் நிறுவன ஊழியர். இவரது 'வாட்ஸ் ஆப்' எண்ணிற்கு கடந்தாண்டு நவ.,ல் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தான் 'ஷான்கோ கோல்டு எக்ஸ்சேஞ்ச்' நிறுவனத்தில் பணியாற்றுவதாக தெரிவித்தார். தங்களின் நிறுவனத்தின் மூலம் தங்கத்தை ஆன்லைனில் வாங்கி, சிறு வியாபாரிகளுக்கு ஆன்லைன் வாயிலாக சப்ளை செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என தெரிவித்தார். ஸ்ரீநிதிஷ், அந்த நபர் கொடுத்த 'டெலிகிராம்' லிங்க்கை பயன்படுத்தி, குழுவில் இணைந்தார். அதில் பல்வேறு வங்கி கணக்குகளுக்கு, ரூ. 13.21 லட்சம் அனுப்பி, இணைய வழியில் தங்கம் வாங்கி விற்பனை செய்தார். அவர் செய்த வியாபாரத்திற்கான பணம் அனைத்தும், அவரின் ஷான்கோ உறுப்பினர் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் லாப பணத்தையும், முதலீடு செய்த பணத்தையும் நிதிஷ் எடுக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. அப்போது, தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.