UPDATED : மார் 01, 2025 07:53 AM | ADDED : பிப் 28, 2025 06:44 PM
மயிலாடுதுறை: பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமி மீது தவறு இருப்பதாக, பேசிய மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் பணியிடம் மாற்றப்பட்டு உள்ளார்.மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்றரை வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், சில நாட்களுக்கு முன் நடந்தது. இதில் தொடர்புடைய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில், இன்று(பிப்.28) நடந்த போக்சோ தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மகா பாரதி பேசியதாவது:கடந்த வாரத்தில் நடந்த சம்பவத்தில் அந்த குழந்தையே தப்பா நடந்திருக்கிறது. அது நீங்க கவனிச்சு பார்த்தீங்கன்னா தெரியும். எனக்கு கிடைச்ச ரிப்போர்ட்படி, காலையில் அந்த பையன் முகத்தில் குழந்தை துப்பி இருக்கிறது. அது தான் காரணம்.இரண்டு பக்கமும் பார்க்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. தடுப்பு தான் முக்கியம். பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு கலெக்டர் பேசினார்.கலெக்டரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கலெக்டரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து பின்னணி பாடகி சின்மயி வெளியிட்ட பதிவு: பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மூன்றரை வயது குழந்தையை கலெக்டர் குறை சொல்கிறார். இந்த அதிகாரி, கற்பழிப்பு மன்னிப்பு பிரிவில் சிறப்பு பயிற்சி எடுத்திருப்பார் போலிருக்கிறது. பாலியல் குற்றவாளி கொண்டாடப்படுவது தமிழகத்தில் புதிதில்லை. அது கலாசாரத்திலேயே இருக்கிறது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.சர்ச்சை ஏற்பட்டதை தொடர்ந்து, 'குழந்தைகளுக்கு பெற்றோர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே தான் அவ்வாறு பேசினேன்' என்று கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார். இதனிடையே, மயிலாடுதுறை கலெக்டரின் பேச்சுக்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை; மூன்றரை வயது குழந்தை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து மயிலாடுதுறை கலெக்டர், அந்தக் குழந்தையின் மீதும் தவறு இருக்கிறது என்று முற்றிலும் பொறுப்பற்ற முறையில் கூறியிருக்கிறார். அவருக்கு, தமிழக பா.ஜ., சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.தமிழகம் முழுவதும் தொடர்ந்து பெண்களும், பள்ளி மாணவிகளும், குழந்தைகளும் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் நிலையில், முதல்வரும், அமைச்சர்களும், பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழி போட்டு,அவர்களின் தனிப்பட்ட விவரங்களை வெளியிட்டதன் தொடர்ச்சியே, கலெக்டரின் இந்த முட்டாள்தனமான பேச்சுக்குக் காரணம். விளம்பர நாடகங்களை அரங்கேற்றி, தனக்குத்தானே பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கனவுலகில் சஞ்சரிக்கும் முதல்வர் ஸ்டாலின், எப்போதுதான் இயல்பு நிலைக்கு வருவார்?இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சர்ச்சை பேச்சு எதிரொலியாக கலெக்டர் மகாபாரதியை பணியிடம் மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.பணியிடம் மாற்றப்பட்ட மகாபாரதி காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார்.