சென்னை:காவல் துறையில், துறை சார்ந்த சீர்திருத்தங்களை ஏற்படுத்த, தமிழக காவல் துறைக்கும், இந்திய காவல் அறக்கட்டளைக்கும் இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்திய காவல் அறக்கட்டளை என்பது தன்னாட்சி அமைப்பு. இதை மேகாலயா முன்னாள் டி.ஜி.பி., ராமச்சந்திரன் உருவாக்கினார். இதன் தலைவராக, தற்போது, உ.பி., முன்னாள் டி.ஜி.பி., ஓம் பிரகாஷ் சிங் உள்ளார். துணை தலைவராக, தெலுங்கானா மாநில விஜிலென்ஸ் டி.ஜி.பி., இஷ் குமார் உள்ளார். இவர், காவல் துறை சீர்திருத்த திட்ட இயக்குநராகவும் உள்ளார். இந்திய காவல் அறக்கட்டளை வாயிலாக, தமிழக காவல் துறையில், துறை சார்ந்த சீர்திருத்தங்களை உருவாக்க, தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இதையடுத்து, டி.ஜி.பி., அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், டி.ஜி.பி., சங்கர் ஜிவால், இந்திய காவல் அறக்கட்டளை நிர்வாகிகள் கையெழுத்திட்டனர். துறை சார்ந்த சீர்திருத்த திட்டமானது, முதல் கட்டமாக, ஆவடி காவல் ஆணையரகத்தில், 15 போலீஸ் நிலையங்களிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில், 15 போலீஸ் நிலையங்களிலும் அமல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்திற்கான ஆய்வு பணிகள் ஓராண்டுக்கு நடக்க உள்ளன. போலீஸ் நிலையங்களுக்கு வரும் புகார்தாரர்கள், பாதிக்கப்பட்ட நபர்கள், சாட்சிகள், குடிமக்களுக்கான சேவை வேண்டுவோர், அரசு சாரா நிறுவனங்கள், அரசு மற்றும் காவல் துறையை சேர்ந்த போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்பட உள்ளன.