UPDATED : டிச 03, 2024 10:06 AM | ADDED : டிச 03, 2024 09:50 AM
மேட்டூர்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீர்பிடிப்பு பகுதிகளில் பெஞ்சல் புயல் காரணமாக பலத்த மழை கொட்டியது. அதன் எதிரொலியாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து தொடர்ந்து அதிகரித்து வண்ணம் உள்ளது. நேற்று(டிச.2)விநாடிக்கு நீர்வரத்து 7,414 கன அடியாகவும், அணையின் நீர்மட்டம் 110.93 அடியாக இருந்தது. இன்று (டிச.3) காலை நிலவரப்படி நீர்வரத்து விநாடிக்கு 9,246 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் அதிகரித்து, 111.39 அடியாக இருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக விநாடிக்கு 1,000 கன அடி நீரும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களில் விநாடிக்கு 300 கன அடி நீர் வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 80.40 டி.எம்.சி.,யாக உள்ளது. இதேபோன்று காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து காலை 10:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 23 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. நேற்று மாலை வினாடிக்கு 5,500 கன அடியாக வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.