உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிபாரிசு இருந்தால் தான் பால் அட்டை

சிபாரிசு இருந்தால் தான் பால் அட்டை

சென்னை:'உயர் அதிகாரிகளின் சிபாரிசு இருந்தால் தான், ஆவின் ஆரஞ்சு நிற பால் அட்டை பெற முடியும்' என, ஆவின் அதிகாரிகள் தெரிவிப்பது, பொது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஆவின் நிறுவனம் விற்பனை செய்யும், ஆரஞ்சு நிற பாக்கெட் பால், அதிக கொழுப்பு நிறைந்தது. இப்பால் லிட்டர், 60 ரூபாய்க்கு கடைகளில் விற்கப்படுகிறது. பால் அட்டை வைத்திருப்போருக்கு, 46 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இதனால், பலரும் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுளை விரும்பி வாங்குகின்றனர். இதைப்பெற பலரும் முயற்சித்து வருகின்றனர். ஆனால், உயர் அலுவலர்கள் மற்றும் அமைச்சர்கள் சிபாரிசு இருந்தால் மட்டுமே, அதிகாரிகள் அட்டை வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது குறித்து, ஆவின் பால் நுகர்வோர் கூறியதாவது:ஆவின் நிறுவனத்தின், ஆரஞ்சு நிற பால் பாக்கெட் அட்டைக்கு, 'டிமாண்ட்' அதிகம். இதைப்பெற, அலுவலர்கள் மற்றும் முகவர்களை அணுகும் போது, உயர் அதிகாரிகளின் சிபாரிசு, அமைச்சர் சிபாரிசு இருந்தால் வழங்குவோம் என்கின்றனர். இதனால், ஆவின் அட்டையை எளிதாக பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி, ஆவின் ஆரஞ்சு நிற பால் அட்டை, அனைவருக்கும் எளிதாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுபற்றி, ஆவின் அதிகாரிகள் கூறியதாவது:ஆரஞ்சு நிற பால் அட்டையை, சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர். இந்த பாலை, அட்டை வாயிலாக வாங்கும் போது, லிட்டருக்கு, 14 ரூபாய் வரை லாபம் பெற முடியும். அதனால், ஒரே நபர் பல பெயர்களில் அட்டை களை வாங்கி, அதன் வாயிலாக பால் பாக்கெட்டுகளை வாங்குகின்றனர். அவற்றை, வெளிச்சந்தை மற்றும் ஹோட்டல்களுக்கு அதிக விலைக்கு விற்கின்றனர். இதனால், ஆரஞ்சு நிற பால் அட்டை கேட்போர் குறித்து விசாரித்த பிறகு வழங்குகிறோம். சிபாரிசு இருந்தால் தான் அட்டை என்று கூறவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ