வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மைக்ரோசாப்ட் டிஜிட்டல் முறையில் நிறைய புத்தகங்களை சேமிக்கும் வேலையசெய்கிறார்கள் இவர்கள் வித்தியாசமா யோசிப்பதில் வல்லவர்கள்
சென்னை: ''பழமையான ஆவணங் களை பாதுகாக்க, ஜப்பான் திசு முறையில் செப் பனிடுதல் பணி நடக்கிறது,'' என, அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.தேசிய ஆவணக் காப்பகம், தமிழக ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், 50வது தேசிய ஆவணக் காப்பாளர்கள் குழு கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. பொது மக்களின் வசதிக்காக, பழமையான ஆவணங்கள், மின்னணு மயமாக்கப்பட்டு உள்ளன. அதற்காக புதிதாக உருவாக்கப்பட்ட http://www.digitamilnaduarchives.tn.gov.in/ என்ற இணையதளத்தை, உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் துவக்கி வைத்தார்.மேலும், 'ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக, 1857ம் ஆண்டுக்கு முன், தமிழ்நாட்டில் நடந்த போராட்டங்கள் மற்றும் தியாகங்கள்; மைசூர் போர்களும், தமிழ்நாடு கைப்பற்றப்பட்ட முறைகளும்' என்ற இரண்டு நுால்களையும் அவர் வெளியிட்டார். பின், அமைச்சர் பேசியதாவது: இந்தியாவின் உண்மை வரலாற்றை ஆராய, ஆவணங்களை தேடி வரும் அறிஞர்களுக்கு ஆதாரங்களை வழங்கும் ஆவணக் காப்பாளர்கள் பணி மிகவும் முக்கியமானது.நாட்டில் எத்தனை துறைகள் இருந்தாலும், அத்தனை துறைகளின் ஆவணங்களையும் பாதுகாத்து, அதை ஆவணக் காப்பகத்துறை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்கிறது. ஆவணங்களே அரசு நிர்வாகத்தின் முதுகெலும்புகள். தமிழக ஆவணக் காப்பகம் மிகவும் பழமையானது. இங்கு, 300 ஆண்டுகள் பழமையான, 40 கோடிக்கும் அதிகமான ஆவணங்கள் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. பழமையான ஆவணங்கள், நீண்ட காலம் நிலைத்திருக்க, ஜப்பான் திசு முறையை பயன்படுத்தி செப்பனிடுதல் போன்ற நவீன முறைகள் அமல்படுத்தப்படுகின்றன. இவ்வாறு பேசினார்.
ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளில் வளரும் கோஸோ, மிட்சுமதா, காம்பி எனும் தாவரங்களில் இருந்து பெறப்படும், 'செல்லுலோசில்' இருந்து, மெல்லிய திசு படலம் தயாரிக்கப்படுகிறது. இது, ஒளி ஊடுருவும் தன்மையுடன், காகிதம் போன்ற கடினம் மற்றும் மடங்கும் தன்மை உடையதாக இருக்கும். இது, 'ஜப்பானிய திசு' என்று அழைக்கப்படுகிறது. பழங்கால காகிதங்கள் மற்றும் ஓலைச்சுவடிகளை, வெள்ளிப்புழு, கரையான், கரப்பான் உள்ளிட்ட பூச்சிகள் அரித்து சேதத்தை ஏற்படுத்தும். அதிலிருந்து பாதுகாக்க, ஆவண காப்பகங்களில், ரசாயன கலவை பூசப்படுவது வழக்கம். இதனால், ஆவணங்களின் உண்மைத்தன்மை பாதிக்கப்பட்டது. இதைத்தவிர்க்க, தற்போது, காகிதத்தையோ, ஓலைச்சுவடியையோ சுத்தம் செய்து, அதன்மீது, ஜப்பானிய திசு காகிதத்தை, அமிலத்தன்மை இல்லாத பசையால் ஒட்டுவர். இதை எப்போது வேண்டுமானாலும் எளிதாக பிரித்தெடுக்க முடியும். அதனால், ஆவண பாதுகாப்பில் இந்த நவீன முறை பயன்படுத்தப்படுகிறது.
மைக்ரோசாப்ட் டிஜிட்டல் முறையில் நிறைய புத்தகங்களை சேமிக்கும் வேலையசெய்கிறார்கள் இவர்கள் வித்தியாசமா யோசிப்பதில் வல்லவர்கள்