சென்னை: மறைந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு புகழாரம் சூட்டி பிரதமர் மோடி பேசியது, அக்கட்சியினருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பா.ஜ.,வுடன் 2014 லோக்சபா தேர்தலில் தே.மு.தி.க., முதல் முறையாக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. பிரதமர் வேட்பாளராக, முதல் முறையாக களமிறங்கிய மோடிக்கு, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தீவிர பிரசாரம் செய்தார். டில்லியில், மோடி பிரதமராக பதவியேற்ற விழாவிற்கு, விஜயகாந்த் நேரில் அழைக்கப்பட்டார். அதன்பிறகு, பல்வேறு காரணங்களால், பா.ஜ., கூட்டணியில் இருந்து விஜயகாந்த் விலகி இருந்தார். சமீபத்தில், விஜயகாந்த் மறைவை ஒட்டி, பிரதமர் மோடி இரங்கல் கடிதம் வெளியிட்டார். அதில், விஜயகாந்த், தனது நண்பர் என அவர் குறிப்பிட்டு இருந்தார்.திருச்சியில் நேற்று நடந்த விமான நிலைய புதிய முனையம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதில் பேசிய பிரதமர், 'சினிமாவிலும், அரசியலிலும், கேப்டனாக திகழ்ந்தவர் விஜயகாந்த். அரசியல்வாதியாக தேசிய நலனை அவர் முன்னிறுத்தினார்' என, புகழாராம் சூட்டினார். புத்தாண்டில் முதல் மங்களகரமான நிகழ்ச்சியில் விஜயகாந்த் மறைவு குறித்து பிரதமர் மோடி பேசியது, அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி தே.மு.தி.க.,வினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், விஜயகாந்த் குறித்து மோடி பேசிய வீடியோவை சமூக வலைதளங்களில், விஜயகாந்த் குடும்பத்தினரும், தே.மு.தி.க.,வினரும் பகிர்ந்து வருகின்றனர்.