போதைப்பொருள் கடத்தலை தடுக்க மீனவ கிராமங்களில் கண்காணிப்பு குழு
சென்னை: இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தும் நுழைவு வாயிலாக, தமிழகம் மாறி வருவதால், மத்திய, மாநில போலீசார் இணைந்து, மீனவ கிராமங்களில் கண்காணிப்பு குழுக்களை அமைத்து வருகின்றனர்.சில தினங்களுக்கு முன், சென்னையில் டி.ஜி.பி., சங்கர் ஜிவால் தலைமையில், போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக, மத்திய, மாநில போலீஸ் மற்றும் அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, சென்னை திருவொற்றியூர் முதல் ராமேஸ்வரம் வரை உள்ள மீனவ கிராமங்களில், மத்திய, மாநில போலீசார் இணைந்து, கண்காணிப்பு குழுக்கள் அமைத்து வருகின்றனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தும் நுழைவு வாயிலாக, தமிழகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடத்தல்காரர்கள் பதுங்கி இருக்கவும், அவர்கள் கடலுக்குள் நுழைந்து வெளியேறவும், மீனவ கிராமங்கள் வசதியாக உள்ளன. மீன்பிடி படகு களும் போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்படுகின்றன.கடத்தல்காரர்கள், சென்னை செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் குடோன் அமைத்து, போதை பொருட்களை பதுக்குகின்றனர். இங்கிருந்து, ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் முகாம் உள்ளிட்ட பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து இலங்கைக்கு கடத்தப்படுகின்றன.மீனவ கிராமங்களை பயன்படுத்தி, போதைப் பொருள் கடத்தல் தடுப்பதை தடுக்க, கண்காணிப்பு குழுக்களை அமைத்து வருகிறோம். இதில், மீனவ கிராம இளைஞர்கள், மத்திய, மாநில போலீசார் இடம் பெற்றுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.