| ADDED : டிச 23, 2025 02:49 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்துாணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி, அங்கு பொதுமக்கள் தன்னெழுச்சியாக வீடுகளில் முருகன், சேவல் படத்துடன் மஞ்சள் கொடி கட்டியும், வாசலில் விளக்கேற்றியும் வருகின்றனர். நேற்று முன்தினம் மலை அடிவாரத்திலுள்ள மக்கள், இஸ்லாமியர்களுக்கு சந்தனக்கூடு விழாவிற்கு மலையில் கொடியேற்ற அனுமதிக்கிறீர்கள். ஆனால் நீதிமன்ற உத்தரவுப்படி எங்களுக்கு தீப துாணில் தீபம் ஏற்ற அனுமதி மறுக்கிறீர்கள் என போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டு இரவில் விடுவிக்கப்பட்டனர். அந்த பகுதியிலுள்ள வீடுகளில் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் முருகன், சேவல் படம் பொறித்த மஞ்சள் கொடிகளை பெண்கள் கட்டியுள்ளனர். இரண்டு வாரங்களுக்கு முன் இதே போன்று, தீபத்துாணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி திருப்பரங்குன்றத்தில் வீடுகளில் சேவல் படம் பொறித்த கொடிகள் ஏற்றப்பட்டன.