வாகன ஆண்டு சந்தா ரூ.3000 ஆகஸ்ட் 15ல் புதிய திட்டம் துவக்குகிறது நகாய்
விக்கிரவாண்டி:'இலகுரக வாகனங்கள், ஆண்டு சந்தா 3,000 ரூபாய் செலுத்தி, 200 முறை இந்தியாவில் உள்ள டோல்கேட்களை கடந்து செல்லலாம்' என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், அடுத்த மாதம், 15ம் தேதி சுதந்திரதினம் முதல் புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இதன்படி, நாடு முழுதும் உள்ள சுங்கச்சாவடிகளில், கார், ஜீப், வேன் போன்ற இலகு ரக வாகனங்கள் 3,000 ரூபாய், 'இ - பாஸ்டேக்'கில் செலுத்திபாஸ் பெற்று விட்டால், ஒரு ஆண்டு அல்லது, 200 முறை சுங்கச்சாவடிகளை கடந்து செல்லலாம். இந்த வருடாந்திர பாஸ் அறிமுகத்தின் மூலம், தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக பயணம் மேற்கொள்பவர்கள் பயண கட்டணங்களில் சேமிப்பு மற்றும் எளிய முறையிலான 'பாஸ்டேக் ரீசார்ஜ்' மூலம் பயனடைய முடியும். உதாரணமாக இத்திட்டத்தில், சென்னையிலிருந்து பெங்களூரு வரைஒரு முறை செல்ல ஆறு இடங்களில் மொத்தம், 445 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அப்படி மாதம் இரு முறை பயணித்தால் ஆண்டுக்கு, 10,680 ரூபாய் செலுத்த நேரிடும். இந்த புதிய வருடாந்திர பாஸ் மூலம் கூடுதலாக, 56 முறை கட்டண மையங்களை கடக்கவும் மற்றும், 7,680 ரூபாய் வரை பணம் சேமிக்கவும் முடிகிறது. அதே போன்றுசென்னையிலிருந்து திருச்சி செல்லும் வாகனங்கள் ஏழு கட்டண மையங்களில் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டும். புதிய திட்டத்தால் கூடுதலாக, 32 முறை சுங்கச்சாவடிகளை கடக்கவும், 8,880 ரூபாய் வரை சேமிக்கவும் முடியும். வருடாந்திர பாஸ் மூலம் கட்டணத்தை ராஜ்மார்க் யாத்ரா அலைபேசி செயலி மற்றும் நகாய் இணைய தளத்தில் மட்டுமே செலுத்த முடியும். இந்த வருடாந்திர பாஸ், வாகனம் மற்றும் தொடர்புடைய பாஸ்டேக்கின் தகுதி வாகனத்தின் முகப்பு கண்ணாடியில் சரியாக ஒட்டியும், சரியான வாகன எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டிருக்க கூடாது. சரி பார்க்கப்பட்ட பின் செயல்படுத்தப்படும். வருடாந்திர பாஸ் தரவு தளத்தின் மூலம் சரிபார்க்கப்பட்ட பின்னர் வணிகமில்லாத மற்றும் தனியார் கார், ஜீப், வேன்களுக்கு மட்டுமே பொருந்தும். எந்த வணிக வாகனத்திலும் பயன்படுத்தப்பட்டால் முன்னறிவிப்பின்றி உடனடியாக செயலிழக்கம் ஏற்படும்.மேலும் ஏற்கனவே உள்ள பாஸ்டேக் தொகையை இத்திட்டத்தில் பயன்படுத்த முடியாது.