உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தஞ்சை, திருவாரூரில் நீர்நாய்களை பாதுகாப்பதற்கு புதிய திட்டம்

தஞ்சை, திருவாரூரில் நீர்நாய்களை பாதுகாப்பதற்கு புதிய திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில், நீர்நாய்களை பாதுகாப்பதற்கான புதிய திட்டத்தை செயல்படுத்த, வனத்துறை முடிவு செய்துள்ளது. நன்னீர் ஓடும் ஆறுகளில் கிடைக்கும் மீன்களை ஆதாரமாக வைத்து, நீர் நாய்கள் வாழ்கின்றன. நீர் நாய்கள் இருப்பை அடிப்படையாக வைத்து தான், நீர் நிலைகளின் தரம், மாசு அளவுகள் மதிப்பீடு செய்யப்படுகின்றன. உலக அளவில், 13 வகை நீர்நாய்கள் இருப்பதாக, சர்வதேச அமைப்புகள் பட்டியலிட்டுள்ளன. இதில், நம் நாட்டில், 'யூரேஷியன்' நீர்நாய், 'ஸ்மூத் கோட்டட்' நீர்நாய், 'ஏசியன் ஸ்மால் கிளாட்' நீர்நாய் ஆகிய, மூன்று வகை மட்டுமே பரவலாக காணப்படுகின்றன. புதர்களில் வாழும் தமிழகத்தில் இந்த மூன்று வகை நீர்நாய்கள் காணப்பட்டாலும், இவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பு, வாழிட பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது இல்லை. இதனால், நீர்நாய்கள் கண்டுக்கொள்ளப்படாத உயிரினமாக மாறியுள்ளன. நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மையுடைய நீர்நாய்கள், மிகவும் பயந்த சுபாவம் உடையவை. அவை ஆற்றங்கரையோர புதர்களில் பொந்துகள் அமைத்து வாழ்பவை என, வல்லுநர்கள் கூறுகின்றனர். நன்னீர் மீன்கள், சிறிய வகை பறவைகளை, இவை உணவாக உட்கொள்கின்றன. தமிழகத்தில் தாமிரபரணி, காவிரி, வைகை, பவானி, மோயார் போன்ற ஆறுகளிலும், அதை ஒட்டிய பகுதிகளிலும் நீர் நாய்கள் காணப்படுவதாக உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆனால், முறையாக கணக்கெடுப்பு நடத்தப்படாததால், இதன் உண்மையான எண்ணிக்கை தெரியாத சூழல் நிலவுகிறது. எனவே, தமிழகத்தில் நீர் நாய்கள் பாதுகாப்புக்கு என, தனியாக நிதி ஒதுக்கி, புதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து, வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் பரவலாக கண்டு கொள்ளப்படாத சிறிய விலங்குகளுக்கு நிதி ஒதுக்கி, புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். எந்த பகுதியில், எந்த விலங்கு பரவலாக காணப்படுகிறது என்ற விபரங்கள் சேகரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் நிதி பெறும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குள்ள நரி பாதுகாப்பு அந்த வகையில், நீர்நிலைகளை பாதுகாப்பதிலும், சூழல் சமநிலையை ஏற்படுத்துவதிலும், நீர் நாய்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதன்படி, தஞ்சை, திருவாரூர் பகுதிகளில் காவிரியை சார்ந்து, ஸ்மூத் கோட்டட் நீர் நாய்கள் காணப்படுகின்றன. இவற்றின் வாழிடங்களை பாதுகாப்பதற்கும், இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, 25 லட்சம் ரூபாய் ஒதுக்க, அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதேபோன்று, குள்ள நரிகள் பாதுகாப்புக்கான திட்டத்துக்கும் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Venugopal S
அக் 06, 2025 14:35

பசு பாதுகாப்பு திட்டம் என்றால் மத்திய பாஜக அரசு தாராளமாக நிதி உதவி செய்வார்கள்! இது நீர் நாய் தானே!


D Natarajan
அக் 06, 2025 08:45

வரவேற்க வேண்டிய முயற்சி. ஆனால் இதை பயன்படுத்தி பணத்தை ஏப்பம் விட்டு விடக்கூடாது


Barakat Ali
அக் 06, 2025 05:26

நிலத்தில் வாழும் ஊ பீ இஸ் ஐ பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கோணும் .....


Iyer
அக் 06, 2025 05:18

காடுகளை பெருக்குங்கள். அடர்ந்த இலையுடன் உள்ள மரங்களை வளர்த்து ஒவ்வொரு மாநிலத்திலும் 30% TREE COVERAGE ஐ கூடுங்கள் நீர்நிலைகளில் கழிவு நீரை கலக்காமல் - சுத்தமாக வைத்திருங்கள் விலங்குகள் வாழ்ந்தால்தான் மனிதனும் வாழமுடியும். விலங்குகள் மகிழ்ச்சியாக இருந்தால்தான் மனிதனும் மகிழ்ச்சியாக இருக்கமுடியும். .


Subramanian
அக் 06, 2025 07:21

மிகவும் சரியான கருத்து


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை