சென்னை: டாக்டர்கள் பரிந்துரை யின்றி இருமல் மருந்துகள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கும் வகையில், புதிய கட்டுப்பாடுகளை விதிக்க, மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியத்திற்கு, மத்திய மருந்து ஆலோசனை குழு பரிந்துரை செய்துள்ளது. மத்திய பிரதேசத்தில், 'கோல்ட்ரிப்' இருமல் மருந்தை உட்கொண்டதால், 24 குழந்தைகள் உயிரிழந்தன. அந்த மருந்தை தயாரித்த நிறுவனத்தின் மீதும், உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில், இருமல் மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இருமல் மருந்துகளை பொருத்தவரை, அட்டவணை 'கே' எனப்படும், குறைந்த அபாயம் கொண்ட மருந்துகள் பட்டியலில் உள்ளன. காயங்களுக்கு பயன்படுத்தப்படும் பேண்டேஜ், கிருமி நாசினிகள், பாரசிட்டமால் மாத்திரைகள், கிரைப் வாட்டர் உள்ளிட்டவையும், அட்டவணை 'கே'-வின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, அவற்றை வாங்குவதற்கோ அல்லது விற்பனை செய்வதற்கோ, பெரிய அளவில் கட்டுப்பாடுகள் இல்லை. இதன் காரணமாக இருமல் மருந்தை, எப்போதும், யார் வேண்டுமானாலும் வாங்கலாம் என்ற சூழல் உள்ளது. மத்திய பிரதேச சம்பவத்துக்கு பின், சில மாநிலங்களில், இருமல் மருந்துகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதை, நாடு முழுதும் விரிவுப்படுத்த, மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டு வருகிறது. இதற்கான பரிந்துரைகளை, மத்திய அரசிடம், மருந்து ஆலோசனைக் குழு சமர்ப்பித்துள்ளது. அவை பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அவற்றுக்கு ஒப்புதல் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய சூழலில் முழுமையான மருந்தாளுநர் உரிமம் இல்லாதவர்களும், இருமல் மருந்துகளை விற்பனை செய்ய முடியும். அட்டவணை 'கே'வில் இருந்து இருமல் மருந்தை நீக்கிவிட்டால், எளிதில் அவற்றை விற்பனை செய்ய முடியாது. டாக்டரின் பரிந்துரை சீட்டும், மருந்து விற்பனைக்கான உரிமமும் கட்டாயமாகிவிடும் என, மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.