ரயில்வே ஊழியர்கள் 10 பேருக்கு என்.ஐ.ஏ., அதிகாரிகள் சம்மன் ரயில் கவிழ்ப்பு சதி
சென்னை:திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டையில் கடந்த 11ம் தேதி இரவு 8:27 மணியளவில், பாக்மதி விரைவு ரயில், மெயின் லைனுக்கு பதிலாக, 'லுாப் லைனில்' மாறிச் சென்றதால், ஏற்கனவே அங்கு நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. இதனால், 19 பேர் காயமடைந்தனர்; உயிரிழப்புகள் இல்லை.சம்பவ இடத்தில், என்.ஐ.ஏ., என்ற தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்பு படையினர், கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் நிலைய போலீசார் விசாரித்தனர்.அப்போது, மெயின் லைனில் இருந்து லுாப் லைனுக்கு ரயில் தண்டவாளம் பிரியும் இடத்தில் உள்ள, 'கிராசிங் ஸ்விட்ச் பாயின்ட் போல்ட், நட்டு'கள் கழற்றப்பட்டு இருப்பது தெரியவந்தது. அவற்றை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைப்பற்றி, தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் நிலைய போலீசார் நடத்திய விசாரணையில், நாசவேலை செய்து ரயிலை கவிழ்க்க சதி நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. அது தொடர்பாக வழக்குப்பதிவும் செய்துள்ளனர். இந்நிலையில், இந்த நாசவேலை தொடர்பாக, ரயில்வே ஊழியர்கள் மீது, என்.ஐ.ஏ., அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அது தொடர்பாக, விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பி உள்ளனர்.என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:கவரைப்பேட்டையில் சரக்கு ரயில் மீது பாக்மதி விரைவு ரயில் மோதுவதற்கு முன், மெயின் லைனில் சூலுார்பேட்டை வரை செல்லும் பயணியர் ரயில் சென்றுள்ளது. கிராசிங் ஸ்விட்ச் பாயின்டில் போல்ட், நட்டுகள் கழற்றப்பட்டு இருந்தால், இந்த ரயில் லுாப் லைனில் சென்று, அங்கு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியிருக்கலாம். மூன்று நிமிட இடைவெளியில் ரயிலை கவிழ்க்க சதி நடந்திருப்பது, சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், ரயில்வே தண்டவாளத்தில் உள்ள போல்ட், நட்டுகளை கழற்றத் தெரிந்த ரயில்வே ஊழியர்கள், வெளி நபர்கள் வாயிலாக சோதனை செய்து பார்த்தோம். அப்போது, 11 நிமிடங்கள் ஆவது தெரியவந்தது. பொன்னேரி ரயில் நிலையம் அருகே, தண்டவாள பாகங்கள் மூன்று முறை உடைந்து கிடந்துள்ளன. இவை தொடர்பாக, சில ரயில்வே ஊழியர்கள், கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளனர். முழுமையான விசாரணைக்கு பின்னரே, நாசவேலையில் ஈடுபட்டது யார் என்பது குறித்து தெரியவரும்.இவ்வாறு அவர்கள் கூறினர். 'சிசிடிவி' வெளியீடு
ரயில் விபத்து நேரத்தில், அருகிலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள், நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. அந்த பதிவில், சரக்கு ரயில் மீது, பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி, பெட்டிகள் தீப்பிடிக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளன. இந்த காட்சிகளின் அடிப்படையிலும் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.