என்னை பற்றி தவறான தகவல் பரப்புகின்றனர் அஜித்குமார் மீது புகாரளித்த நிகிதா குற்றச்சாட்டு
சிவகங்கை:மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் மீது நகை திருடியதாக புகார் அளித்த திருமங்கலம் பேராசிரியை நிகிதா, ''என்னை பற்றி தவறான தகவலை பரப்புகின்றனர்,'' என, கண்ணீர் மல்க ஆடியோ வெளியிட்டு உள்ளார்.ஆடியோவில் அவர் பேசியதாவது:நான் வேதனை, துயரத்தோடு இந்த தகவலை அனுப்புகிறேன். ஒரு பெண் படித்து மேலே வந்து, வேலை வாங்கி தாய், தகப்பனை காப்பாற்றுவது பெரிய சவாலாக தான் உள்ளது. மடப்புரம் காவலாளி அஜித்குமார் மரணம், என்னையும், என் தாயையும் வேதனையில் ஆழ்த்தியது. போலீசார் அஜித்குமாரை தாக்கிய போது வீடியோ எடுத்த சக்தீஸ்வரன், அன்றைக்கு எங்களுடன் தான் இருந்தார். தி.மு.க., நிர்வாகி
நான் அமைதியாக இருக்கிறேன் என்பதற்காக நான் குற்றவாளி இல்லை. இது கூட, கடவுள் என் மனஉறுதியை அறிய சோதிக்கிறார் என்று தான் நினைக்கிறேன்.அதே போன்று, நான் கல்லுாரிக்கு செல்லாமல் தலைமறைவாக இருப்பதாக தெரிவிக்கின்றனர். கல்லுாரி துவங்கியதும், ஜூன் 16 அன்று ஒரு நாள் மட்டுமே திண்டுக்கல்லில் உள்ள கல்லுாரிக்கு சென்றேன். அதற்கு பின் என் அம்மாவின் மருத்துவ சிகிச்சைக்காக அவருடன் இருப்பதால், கல்லுாரிக்கு செல்லவில்லை.எனக்கு எந்த உயர் அதிகாரியும் தெரியாது. வாய்ப்பு கிடைத்தால், அஜித்குமார் தயாரிடம் மன்னிப்பு கேட்பேன்.எனக்கு எந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளையும் தெரியாது. அஜித்குமார் இறப்பை திசை திருப்பவே, என் தனிப்பட்ட வாழ்க்கை, வரலாற்றை பரப்பி வருகின்றனர்.இந்த பிரச்னைக்கு முழு காரணம், திருமங்கலம் அருகே ஆலம்பட்டியை சேர்ந்த தி.மு.க., ஒன்றிய நிர்வாகி தான். அவர் தான் என்னை அசிங்கப்படுத்தும் நோக்கில் செயல்படுகிறார். விதி வலியது, கடவுள் என்ன சொல்கிறாரோ அதை கேட்பேன். சட்டத்திற்கு மரியாதை தருகிறேன். இவ்வாறு பேசிஉள்ளார். தலைமறைவு
இதற்கிடையே, நிகிதா மீது, அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக பலர் புகார் அளித்தனர்.நிகிதா மற்றும் அவரது தாய் சிவகாமி அம்மாள் ஆகியோர் பலரிடம் பணத்தை பெற்று ஏமாற்றியதும், திருமண மோசடியில் நிகிதா ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.போலீசாரின் நடவடிக்கைக்கு பயந்து, அவர் தலைமறைவாகி விட்டதாக தகவல் வெளியானது. நிகிதா மற்றும் அவரது தாயாரை கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் பார்த்ததாகவும், அவர்கள் பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு சென்றதாகவும், போலீசாருக்கு ஒருவர் தகவல் தெரிவிக்கும் ஆடியோ வெளியானது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மவுனம் ஏன்?
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் கோசாலையில் போலீசாரால் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்திற்கு அறநிலையத்துறை சார்பில் ஆறுதல் கூறாமலும், உதவி செய்யாமலும் மவுனம் சாதித்து வருகின்றனர். இதற்கிடையே, அஜித்குமார் கொல்லப்பட்ட வழக்கில் திருப்புவனத்தில் மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் விசாரணை செய்து வருகிறார். மூன்றாவது நாளான நேற்று பலர் விசாரிக்கப்பட்டனர்.